கோவில்களில் மார்கழி மாத பஜனை தொடங்கியது


கோவில்களில் மார்கழி மாத பஜனை தொடங்கியது
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மார்கழி மாத பஜனை நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு திருவனந்தல் பூஜை, 7.30 மணிக்கு சாயரட்ஷை, 10.30 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. அதிகாலை 5 மணி முதல் திருச்சிற்றம்பலம் பஜனை குழுவினர், விஸ்வகர்ம பஜனை குழுவினர், பிராமணாள் பஜனை குழுவினர், பத்திரகாளியம்மன் மகளிர் பஜனை குழுவினர் வாத்திய கருவிகளுடன் பக்தி பாடல்கள் படித்து கோவில் வீதிகளை சுற்றி வந்தனர்.

குலசேகரன்பட்டினம் உதயமார்த்தாண்ட விநாயகர் கோவிலில் மார்கழி மாத பஜனை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருவெம்பாவை பாடப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர்.

உடன்குடி வட்டாரத்துக்கு உட்பட்ட உடன்குடி, பெருமாள்புரம், தேரியூர், வாகவிளை, வேப்பங்காடு, சந்தையடியூர், சோமநாதபுரம், கொட்டங்காடு, காலங்குடியிருப்பு, பரமன்குறிச்சி, வட்டன்விளை, சிதம்பரபுரம், சீர்காட்சி, சிறுநாடார் குடியிருப்பு, தாண்டவன்காடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள இந்து கோவில்களில் நேற்று அதிகாலை மார்கழி மாத பஜனை தொடங்கியது, அதிகாலை 4 மணிக்கு சிறுவர்களும், பெரியவர்களும் திருப்பாவை, திருவெம்பாவை பாடியபடி பல்வேறு வீதிகள் வழியாக சென்று கோவில்களை வந்தடைந்தனர். கோவில்களில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த மார்கழி மாதம் முழுவதும் கோவில்களில் பஜனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story