பூட்டிய வீட்டுக்குள் ஆட்டோ டிரைவர் மர்மசாவு

சேலத்தில் பூட்டிய வீட்டுக்குள்ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சேலம் 4 ரோடு அருகே சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் உமாசங்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், பூட்டி இருந்த ஆட்டோ டிரைவர் உமாசங்கரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது அங்கு உமாசங்கர் மர்மமான முறையில் ஒரு அறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும், வீட்டிற்குள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள அவரது தாய் இருந்துள்ளார். பின்னர் ஆட்டோ டிரைவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, உமாசங்கரின் சாவில் மர்மம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.