சங்ககிரியை சேர்ந்த விவசாயி மகனுக்கு எம்.பி.பி.எஸ். 'சீட்' வாங்கி தருவதாக கூறி ரூ.53 லட்சம் மோசடி-வக்கீல் உள்பட 3 பேர் மீது வழக்கு


சங்ககிரியை சேர்ந்த விவசாயி மகனுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.53 லட்சம் மோசடி-வக்கீல் உள்பட 3 பேர் மீது வழக்கு
x

சங்ககிரியை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகனுக்கு எம்.பி.பி.எஸ். ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி ரூ.53 லட்சம் மோசடி செய்த புகாரில் வக்கீல் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்

எம்.பி.பி.எஸ். 'சீட்'

சங்ககிரி அருகே கோனேரிப்பட்டி அத்திமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). விவசாயி. இவருடைய மகன் விஜய். இவரை கடந்த 2016-2017-ம் ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்க்க கணேசன் ஏற்பாடு செய்து வந்துள்ளார். அப்போது, கொங்கணாபுரத்தை சேர்ந்த ஜோதிடர் பழனிமுத்து என்பவர், கணேசனிடம் தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ். 'சீட்' வாங்கி தருவதாக கூறியதாக தெரிகிறது.

இதை நம்பிய கணேசன், அவருடன் சென்றுள்ளார். அப்போது சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த வக்கீல் தங்கமணி, புதுச்சேரியை சேர்ந்த நாகராஜ் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் எம்.பி.பி.எஸ். 'சீட்' பெறுவதற்கு முதலில் ரூ.23 லட்சத்தை கணேசனிடம் இருந்து பெற்று கொண்டனர்.

ரூ.53 லட்சம் மோசடி

அதன்பிறகு வங்கி கணக்கு மூலம் பல்வேறு தவணைகளில் பல லட்சம் ரூபாய் அவர்களுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் ரூ.53 லட்சத்தை கணேசன் அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவருடைய மகன் விஜய்க்கு எம்.பி.பி.எஸ். மருத்துவ 'சீட்' எதுவும் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். மேலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி கணேசன் நேற்று முன்தினம் இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அதன்பேரில் எம்.பி.பி.எஸ். 'சீட்' வாங்கி தருவதாக கூறி ரூ.53 லட்சம் மோசடி செய்த புதுச்சேரி நாகராஜ், சென்னையை சேர்ந்த வக்கீல் தங்கமணி, கொங்கணாபுரம் ஜோதிடர் பழனிமுத்து ஆகிய 3 பேர் மீதும் கூட்டுசதி, பணமோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story