கார் சாகுபடிக்கு யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை; கலெக்டர் விஷ்ணு தகவல்


கார் சாகுபடிக்கு யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை; கலெக்டர் விஷ்ணு தகவல்
x

கார் சாகுபடிக்கு யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு கூறினார்.

திருநெல்வேலி

கார் சாகுபடிக்கு யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு கூறினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குனர் டேவிட் டென்னிசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பையா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நீர் இருப்பு குறைவு

கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் விஷ்ணு பேசுகையில், ''நெல்லை மாவட்டத்தில் இயல்பான மழை அளவு 815 மில்லி மீட்டர் ஆகும். இந்த ஆண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை 251 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 9 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு நெல்லை மாவட்ட அணைகளில் இருந்த நீர் இருப்பை விட தற்போது குறைவாகவே இருக்கிறது. தரமற்ற விதைகள் விற்பனையை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.

யூரியா தட்டுப்பாடு

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் பேசுகையில், ''நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு விட்டது. ஆனால் கொடுமுடியாறு அணை சிற்றாறு வடிநில கோட்ட கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் கொடுமுடியாறு பாசன கோரிக்கை தொடர்பாக தென்காசி அலுவலகத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே கொடுமுடியாறு அணை பகுதியை தாமிரபரணி வடிநில கோட்டத்துடன் இணைக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடி தொடங்கி உள்ளது. ஆனால் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே யூரியா உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும்'' என்றார்.

இதற்கு பதில் அளித்த கலெக்டர் விஷ்ணு ''கொடுமுடியாறு வடிநில கோட்ட அலுவலகங்கள் நெல்லையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். யூரியா உரம் போதுமான அளவு உள்ளது. கூடுதல் தேவை அடிப்படையில் விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

பன்றி, மான்கள்

கானார்பட்டி விவசாயி ஆபிரகாம் பேசுகையில், விளை நிலங்களில் பன்றி, மான்கள் புகுந்து பயிர்களை முழுவதுமாக அழித்து விடுகின்றன. எனவே பன்றி, மான்கள் விவசாய நிலத்துக்குள் புகுவதை கட்டுப்படுத்த வேண்டும்'' என்றார்.

பாப்பாக்குடி பகுதி விவசாயிகள் பேசுகையில், பாப்பாக்குடியில் வேளாண்மை அலுவலகம் கட்டப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படவில்லை. அதனை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் மண்டலம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடையம் வனச்சரகத்தில் மேலஆம்பூர், சிவசைலம், தர்மபுரம்மடம், கோவிந்தப்பேரி, மேல கடையம், கடையம் பெரும்பத்து பகுதி-2 ஆகிய 6 கிராமங்களின் பகுதிகளை மத்திய அரசு சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவித்து, வனப்பகுதியின் பாதுகாக்கப்பட்ட பகுதியை ஒட்டிய சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் வரை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் எந்த பணியும் செய்ய முடியாத நிலை இருக்கும் எனக் கூறியும் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என கூறியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தொடர்ந்து பேசிய மாவட்ட கலெக்டர் கருத்துக்கணிப்பு கூட்டம் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி முழுவதும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவித்தார். இதேபோல் பல்வேறு பகுதி விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களும் கொடுத்தனர்.

கூட்டத்தில் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story