2 திருநங்கைகள் திருச்சி பெண்கள் சிறையில் அடைப்பு


2 திருநங்கைகள் திருச்சி பெண்கள் சிறையில் அடைப்பு
x

2 திருநங்கைகள் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி

திருநங்கைகள்

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பயணி ஒருவரிடம் கடந்த 24-ந்தேதி நள்ளிரவில் திருநங்கைகள் தகராறில் ஈடுபட்டனர். இதை பார்த்த அரசு பஸ் கண்டக்டர் முத்துகருப்பன் பயணியை மீட்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் ஒன்று சேர்ந்து கண்டக்டரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த முத்துகருப்பன் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி அறிந்த கண்டோன்மெண்ட் உதவி போலீஸ் கமிஷனர் அஜய்தங்கம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின்பேரில் திருநங்கைகள் ரேஷ்மா, கார்த்திகா உள்பட 11 திருநங்கைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிறையில் அடைப்பு

இதில் ரேஷ்மா, கார்த்திகா ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களை திருச்சி ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்களை எந்த சிறையில் (ஆண்கள் அல்லது பெண்கள்) அடைக்கப்போகிறீர்கள் என்று மாஜிஸ்திரேட்டு கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து அவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பரிசோதனை அறிக்கை வந்ததை தொடர்ந்து, இருவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவர்களை பெண்கள் சிறையில் அடைக்க போலீசார் அனுமதி கேட்டனர். அதை பரிசீலனை செய்த மாஜிஸ்திரேட்டு, அவர்கள் இருவரையும், பெண்கள் சிறையில் வருகிற 11-ந்தேதி வரை அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் திருச்சி பெண்கள் சிறையில் நேற்று மாலை அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள திருநங்கைகளை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story