தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

குடியாத்தத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் நம்ம ஊரு சூப்பர் திட்டம், மக்களை தேடி மருத்துவ திட்டம் இணைந்து துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள், களப்பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத்தலைவர் கே.கே.வி.அருண்முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.திருமலை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்வாணன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் அசோக்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் தலைமையில் மருத்துவர்கள் பிரவீன்குமார், ரூத்கனிமொழி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். இதில் 297 பேர் பயன் பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.