தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு: டாக்டர்கள், மாணவர்கள் கருத்து


தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு:  டாக்டர்கள், மாணவர்கள் கருத்து
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு குறித்து டாக்டர்கள், மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி

மருத்துவ பாடங்களை தமிழ் வழியில் படிப்பது குறித்து டாக்டர்கள், மாணவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

டாக்டர்களின் சேவை

மருந்துகள், நோய்களை குணப்படுத்தும். ஆனால் டாக்டர்களால் மட்டும்தான் நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்பது சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல மனநல டாக்டர் கர்ல் ஐங்கின் கூற்றாகும். தன்னுடைய வாழ்நாளில் நோயால் பாதிக்கப்படாத மனிதர்களே கிடையாது. நோய் தாக்குதல் தொடுக்கும் போதெல்லாம் எதிர்முனை தாக்குதல் தொடுத்து, மனிதர்களுக்கு அரணாக நின்று நீடித்த வாழ்வு கொடுப்பவர்கள் டாக்டர்கள். டாக்டர்கள் மட்டும் இல்லை என்றால், மனிதர்களின் ஆயுள் குறைந்து போகும்.

டாக்டராகி சேவையாற்றுவதற்காக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி., எம்.எஸ். ஆகிய மருத்துவப்படிப்புகளை படிக்கிறார்கள். இந்த படிப்புகளில் இடம்பெற்று இருக்கும் அனைத்து பாடங்களும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. அதில் பெரும்பாலான மருத்துவ சொற்றொடர்கள் கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்தும் மொழி பெயர்க்கப்பட்டவை. ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவது போன்று, தேர்வையும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கே மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தமிழில் மருத்துவ பாடங்கள்

ஆங்கிலத்தில் புரிந்து படிப்பதற்கு சிரமப்படும் மாணவ, மாணவிகளுக்காக அவரவர் தாய்மொழியில் மருத்துவ பாடங்களை மொழி பெயர்த்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்து நிலவியது. இதையடுத்து நமது நாட்டிலேயே முதலாவதாக மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவப்படிப்பில் உள்ள 3 பாடங்கள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. உத்தரபிரதேச மாநிலத்திலும் மருத்துவம், என்ஜினீயரிங் பாடப் புத்தகங்கள் இந்தியில் மொழிபெயர்க்கும் பணிகள் நடந்து வருகிறது.

சென்னையில் புதிதாக தமிழ் வழியில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் தமிழ் வழி கல்வி மாணவர்களுக்காக மருத்துவ பாடங்கள் செம்மொழியான தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கான பணிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. மருத்துவம் சார்ந்த 25 பாடப்புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட உள்ளதாகவும், அதில் 13 பாடப்புத்தகங்கள் முக்கிய பாடங்களாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

பயன் உள்ளதா?

முதற்கட்டமாக "கிரேஸ் அனாடமி பார் ஸ்டூடன்ஸ்', 'கைடன் அன்ட் ஹால் டெக்ஸ்ட்புக் ஆப் மெடிக்கல் பிசியாலஜி', 'பெய்லி அன்ட் லவ்ஸ் சாட் பிராக்டீஸ் ஆப் சர்ஜரி (பாகம்-1) ' முதலியார் அன்ட் மேனன்ஸ் கிளீனிகல் ஆப்ஸ் டெட்ரைக்ஸ் ஆகிய 4 மருத்துவ பாடப்புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மாதத்துக்குன் மொழி பெயர்க்கப்பட்ட பாடப்புத்தகங்களை, நடப்பு ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் சேருகின்ற மாணவர்களின் வசம் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மருத்துவ பாடங்களை தமிழ் வழிக்கல்வியில் கற்பது மாணவர்களுக்கு எளிமையாக இருக்கும். தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்காக மருத்துவப்பாடங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படுவது பயன் உள்ளதாக இருக்குமா?, இதனால் அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? என்பது குறித்து மருத்துவம் சார்ந்த மாணவர்கள், டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

அரசுக்கு பாராட்டு

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை நரம்பியல் துறை தலைவர் டாக்டர் ஆர்.எம்.பூபதி:-

தமிழில் மருத்துவ படிப்புக்கான கலைச்சொற்கள் ஏராளமாக இருக்கிறது. உடல் இயக்கம், பகுத்தறிதல், உடற்கூறு இயல் என மருத்துவ கலைச்சொற்களை நாங்கள் கட்டுரை மூலமாகவும், புத்தகங்கள் வடிவிலும் எழுதி இருக்கிறோம். தமிழக மாணவர்களுக்காக மருத்துவ பாடப்புத்தகங்களை தமிழ்மொழியில் கொண்டுவருவது நல்ல முன்னெடுப்பு. தமிழில் மருத்துவ பாடப்புத்தகங்கள் மொழி பெயர்க்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது. தமிழ்வழியில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் முயற்சியும் சிறப்பானது.

இதனை நான் வரவேற்கிறேன். உடனடியாக இதை செயல்படுத்த வேண்டும். மருத்துவக்கல்வி தொடர்பான புத்தகங்களை நானே மொழி பெயர்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். தமிழக அரசு தனது முயற்சியாக அதை செய்து காட்டியிருப்பது, பாராட்டத்தக்கது.

சிரமம் ஏற்படும்

கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன்:- மருத்துவம் தமிழில் படிப்பது என்பது, தமிழ்வழிக்கல்வி மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஏனென்றால் அவர்களுக்கு படிப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கும். அதே சமயத்தில் தமிழ்வழியில் படிக்கும்போது அவர்களுடைய தொழில்முறை என்பது தமிழகத்தின் உள்ளேயே வரையறுக்கப்பட்டு விடும். மருத்துவம் என்பது தொடர் படிப்பாகும். மேற்படிப்புக்கோ அல்லது பணிபுரிவதற்கோ மற்ற மாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்றால் சிரமத்தை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. 'லேன்செட்' போன்ற உலக புகழ்பெற்ற மருத்துவ இதழ்கள் படிப்பது என்பது டாக்டர்களுக்கு மிகமிக இன்றியமையாதது. இதேபோல மேலும் பல மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி இதழ்கள் ஆங்கிலத்தில் இருப்பதால், தமிழில் படித்தவர்கள் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படலாம்.

இதேபோல வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் மருத்துவம் தொடர்பான மாநாடுகளில் பங்கேற்கும்போது சிரமம் ஏற்படும்.

நல்ல வாய்ப்பு

தூத்துக்குடியை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகிந்தன்:-

தமிழ் வழியில் படித்து விட்டு வரும் மாணவர்களுக்கு தமிழ்வழி மருத்துவப்படிப்பு நல்ல வாய்ப்பாக இருக்கும். தமிழ்வழி படிப்பு தொடங்கப்படும் போது, சில பிரச்சினைகள் இருக்கும். படிப்படியாக செயல்படுத்தலாம். அனைத்து பாடப்புத்தகங்களையும் தமிழில் மாற்ற வேண்டும். அதன்பிறகுதான் தமிழ்வழியில் மாணவர்கள் படிக்க முடியும்.

அதே நேரத்தில் ஆங்கிலத்தில் கற்றுக்கொள்வதற்கு மாறிக் கொள்வது நல்லது. ஏனென்றால் மருத்துவப்படிப்புக்கான புத்தகங்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளன. தொடர்ந்து நம் திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், வெளிநாட்டு ஆராய்ச்சி கட்டுரைகளை படித்துதான் ஆக வேண்டும். தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு குழு இருந்து வழிகாட்ட வேண்டும். தற்போதைய சூழலில் மாணவர்கள் சிலரை சார்ந்து இருக்க வேண்டி இருக்கும். ஆங்கிலத்தில் படிக்கும்போது, அவர்களே படித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

குறிப்பிட்ட காலம்

தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் பானு:-

மருத்துவ படிப்பில் கடந்த 1991-ம் ஆண்டில் உடற்கூறுவியில் விரிவாக படித்தார்கள். அப்போது வெளிநாட்டு பேராசிரியர்கள் எழுதிய பல புத்தகங்களை படித்தார்கள். அதன்பிறகு படிப்படியாக அந்த புத்தகங்களில் இருந்து முக்கியமான தகவல்களை மட்டும் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு வந்து விட்டன. இதனால் மாணவர்கள் உடற்கூறுவியலை குறைந்த கால அவகாசத்தில் படித்து விடுகின்றனர்.

தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்து வருகின்றனர். இவர்கள் ஆரம்பத்தில் எளிதாக படிப்பதற்காக தனியாக தமிழிலும் கற்று கொடுக்கப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு அவர்களாகவே ஆங்கிலத்தில் படிக்க தொடங்கி விடுகின்றனர். தமிழில் படிக்கும் போது, மருத்துவத்தில் நுட்பமான ஆங்கில வார்த்தைகள் அப்படியே தமிழில் மாற்றப்படும். இது மாணவர்களுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக மாணவர்கள் ஆங்கிலத்தில் படிப்பதே அவர்களுக்கு எளிதாக இருக்கும். மருத்துவத்தில் பல்வேறு வளர்ச்சிகளை பெற வேண்டுமானால், உலக மொழியான ஆங்கிலத்தில் படிப்பது சிறப்பாக இருக்கும்.

மொழி பெயர்ப்பில் சிரமம்

காயல்பட்டினத்தை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் கிறிஸ்டோபர் ராஜ்:-

மருத்துவ படிப்பை தமிழ்வழியில் படிக்கும் போது மருத்துவம் சம்பந்தப்பட்ட சில வார்த்தைகளை மொழி பெயர்ப்பதில் சிரமம் இருக்கும். வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ, மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு செல்லும்போது சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். உலகம் முழுவதும் ஆங்கிலம் இருப்பதால் பொதுவான மொழியாக உள்ளது. இதில் படிக்கும்போது எளிதில் மேற்படிப்புகளை படிக்க முடியும். தமிழ் வழியில் படித்தவர்கள் மருத்துவபடிப்பில் சிறப்பாக படித்து உள்ளனர். மருத்துவ பாடங்களை தமிழில் மொழி பெயர்க்கும் போது, அது தமிழ் போன்று இருக்காது. ஆங்கிலத்தில் படிப்பது எளிதாக இருக்கும்.

புரிந்து படிக்க...

தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவன் அபிஷேக்:-

தமிழ் வழியில் படித்து வரும் மாணவர்கள் முதலில் மருத்துவம் படிக்க சற்று சிரமப்படுவார்கள். தமிழில் மருத்துவ படிப்பு வரும்போது, இது போன்ற மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டு படிக்க முடியும். ஆனால், தமிழ்வழியில் படிக்கும்போது, அவர்கள் தமிழகத்தில் மட்டுமே பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கும். நாம் வெளி மாநிலமோ, வெளிநாட்டுக்கோ செல்ல வேண்டுமானால் ஆங்கிலத்தில் படிப்பது சிறந்தது. பாடப்புத்தகங்களை மொழி பெயர்க்கும் போது, முக்கியமான ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் மொழிபெயர்க்க வாய்ப்பு உள்ளது. பிளஸ்-2 வகுப்பில் தமிழ்வழியில் படித்து வந்த மாணவர்கள் கூடுதல் சிரத்தை எடுத்து படித்து தேர்ச்சி பெற்று வருகின்றனர். எதிர்காலத்தில் பல்வேறு வளர்ச்சிகளை பெற ஆங்கிலம் உதவியாக இருக்கும்.

இவ்வாறு கூறினர்.


Next Story