வரி உயர்த்தியதை முறைப்படுத்த கலெக்டர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்


வரி உயர்த்தியதை முறைப்படுத்த கலெக்டர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்
x

திருவண்ணாமலை நகராட்சியில் வரி உயர்த்தப்பட்டுள்ளதை முறைப்படுத்த கலெக்டர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சியில் வரி உயர்த்தப்பட்டுள்ளதை முறைப்படுத்த கலெக்டர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.

புதிய மாவட்டங்கள்

திருவண்ணாமலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்ற 3 மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு, பயனுள்ள பதில்களை தருவார். அதேபோல இந்த கூட்டத்தில்நகர மன்ற தலைவர்களும், பேரூராட்சி தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் கோரிக்கைகளை எடுத்து கூறுகின்ற போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி உடனுக்குடன் பதிலை கொடுத்து உள்ளார்.

அவர் ஒரு பதில் சொல்கிறார் என்றால் அரசாங்கத்தில் இருந்து பல கோடி ரூபாய் திட்டமாக இங்கு வருகிறது என்று பொருள். யார் யாரிடம் எதனை கொடுத்தால் அதனை சிறப்பாக செய்வார் என்று அறிந்து நகராட்சி நிர்வாக துறை அவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு கூட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் முதன்மை மாவட்டங்களாக திகழ வேண்டும் என்று கேட்டு கொண்டதன் பேரில் இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

அடுக்கு மாடி கார் பார்க்கிங்

கள்ளக்குறிச்சி மாவட்டமும், திருப்பத்தூர் மாவட்டமும் புதிய மாவட்டங்கள். திருவண்ணாமலை மாவட்டம் என்பது 25 ஆண்டுகளை கடந்த மாவட்டம். ஆனால் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்கள் கடந்த ஆட்சி காலத்தில் அவர்கள் சொல் அளவில் அறிவித்து விட்டு சென்றார்களே தவிர, அதற்கு தேவையான கட்டிடங்கள் கூட இந்த ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது.

இந்த 2 மாவட்டங்கள் மூலம் கேட்கப்பட்டு உள்ள கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து முழுமையாக செய்து கொடுத்தால் அந்த மாவட்டங்கள் முழுமையாக வளர்ச்சி பெற முடியும். இந்த 2 மாவட்டங்களை தத்து பிள்ளைகளாக நீங்கள் (அமைச்சர் கே.என்.நேரு) எடுத்து கொண்டு உங்கள் துறையின் சார்பில் அனைத்தையும் நிறைவேற்றி தர வேண்டும். திருவண்ணாமலை என்பது ஆன்மிக பூமி. இதனால் திருவண்ணாமலைக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தின் பழைய கட்டிடம் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ளது. அந்த கட்டிடத்தை அழித்து விட்டு அங்கு அடுக்கு மாடி கார் பார்க்கிங் கட்டினால் நகராட்சிக்கு அதிகமாக வருமானம் வரும், ஆன்மிக மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். கடந்த ஆட்சி காலத்தில் முறையில்லாமல் பல்வேறு நகராட்சிகளில் வரியை உயர்த்தியுள்ளனர்.வேலூர் மாநகராட்சியை விட திருவண்ணாமலை நகராட்சியில் 500 மடங்கு வரி ஏற்றி உள்ளனர்.

இதனால் பெரும்பாலானோர் வரியை கட்ட மறுக்கின்றனர். சிலர் நீதிமன்றத்திற்கு செல்கின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைத்து அதை முறைப்படுத்தினால் திருவண்ணாமலை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை தரும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story