'உரிய அனுமதி இல்லாமல் இனி ஒரு கட்டிடம் கூட கட்டப்படாது' அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்

‘‘உரிய அனுமதி இல்லாமல் இனி ஒரு கட்டிடம் கூட கட்டப்படாது’’ என்றும், ‘‘விதிமீறல் கட்டிடங்கள் மீதான வரைமுறைக்காக சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளோம்’’ என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
சென்னை,
நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட உதவி இயக்குனர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை, சென்னை கோயம்பேட்டில் உள்ள இயக்கக வளாகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார். மேலும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான கையேடுகளையும் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, நகர் ஊரமைப்பு இயக்குனர் பா.கணேசன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் எ.சரவணவேல்ராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டு...
அதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நம்மை தேடி வரக்கூடியவர்களுக்கு எந்த காலதாமதமும் இல்லாமல் பணிகளை செய்துதர வேண்டும், எந்த கட்டிடத்துக்கு அனுமதி கொடுக்கிறோமோ, அந்த கட்டிடத்துக்கு அனுமதியை மீறாத வகையில் பணிகள் நடப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அவரவர் எல்லையில், அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டினாலும் அதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு அந்தந்த அதிகாரிகளுக்கு இருக்கிறது என்று அறிவுரை வழங்கியிருக்கிறோம்.
எதிர்காலத்தில் சட்டவிரோதமாக எந்த கட்டிடங்களும் கட்டப்பட கூடாது என்பது தான் எங்கள் இலக்கு. தொடக்கத்திலேயே கட்டுமான நிறுவனத்துக்கோ, அதன் உரிமையாளருக்கோ நாம் உறுதுணையாக இருந்துவிட்டு, எதிர்காலத்தில் சிக்கலில் மாட்டிக்கொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தி இருக்கிறோம். சட்ட விதிகளுக்கு உட்பட்டே அனைத்து கட்டிடங்களும் வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு
கட்டிட அனுமதி இல்லாமலோ, அனுமதி பெற்றதை மாற்றியோ கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வரைமுறைப்படுத்துவதற்காக சட்டங்கள் இருக்கிறது. அதில் நிறைய பேர் வரவில்லை. காரணம், போதிய விழிப்புணர்வு இல்லாமல் போனது. காலக்கெடு கொடுத்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால், அந்த கட்டிடங்கள் வந்திருக்கிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்று கருதுகிறோம். ஆனால் ஒருமுறை மட்டுமே வரைமுறைக்கு வாய்ப்பு தருவோம் என்று நீதிமன்றம் திட்டவட்டமாக சொல்லிவிட்டது. இது 100 சதவீதம் சரியானது.
ஆனால் போதிய விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தாத காரணத்தால் சில சங்கடங்கள் வந்திருக்கிறது. எனவே அதை நீதிமன்றம் கவனத்துக்கு எடுத்துச்சென்று நிலைமைகளை சொல்லலாம் என்று கருதுகிறோம்.
இனிமேல் ஒரு கட்டிடம் கூட அனுமதியற்ற கட்டிடம் வராது. கொடுத்த அனுமதியை மீறி மாறுபட்டு அந்த கட்டிடம் கட்டப்படாது. அதை கண்காணிக்கும் பொறுப்பு எங்களுடையது, அதை செய்வோம் என்று உத்தரவாதம் கொடுப்போம்.
ஆனால் ஏற்கனவே உள்ள கட்டிடங்களுக்கு ஒரு வரைமுறை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கவுள்ளோம். சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி இருந்தால் இதுபற்றி தெளிவு கிடைக்கும் என்று யோசித்திருக்கிறோம். எனவே அந்த குழுவை உருவாக்குவது குறித்து யோசித்து வருகிறோம்.
விதிமீறல் கட்டிடங்களுக்கு...
இதனை நீதிமன்றம் முழுமையாக அனுமதிக்கும் பட்சத்தில் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்படும். சில கட்டுப்பாடுகள் குறித்தும் முடிவு எடுக்க முடியும். கட்டிட மாறுபாட்டை அனுமதித்து விட்டோம் என்றால் அது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். எனவே தான் கட்டுமான நிறுவனங்களை ஒன்றாக வரவழைத்து, அவர்களுக்கு தெளிவான அறிவுரைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே வந்துவிட்ட கட்டிடங்களுக்கு 1999, 2007, 2016-ம் ஆண்டுகளில் என சுப்ரீம் கோர்ட்டு வரையறைகளை அளித்திருக்கிறது. இந்த ஆண்டுகளுக்கு இடையில் வந்த கட்டிடங்களை ஒழுங்குபடுத்துவதற்காக நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம். நீதிமன்றம் நிச்சயம் கடுமையாக திட்டுவார்கள்.
இருந்தாலும் மக்களின் நன்மை கருதி, நீதிமன்றம் எதிர்பார்ப்பதை இந்த அரசு நிச்சயம் செய்யும். கடந்த 1½ ஆண்டு காலமாக சி.எம்.டி.ஏ.வுக்கு அனுமதி மீறலுடன் வந்த எந்த கட்டிடங்களையும் நாங்கள் அனுமதிக்கவில்லை. உரிய ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர்களும் அதனை திருத்திக்கொண்டு விட்டார்கள். இன்னும் 9 கட்டிடங்கள் மட்டுமே சரிசெய்ய வேண்டியுள்ளது. இது மாநிலம் முழுவதும் நடைபெற வேண்டும்.
விற்கப்படாத 8 ஆயிரம் வீடுகளை...
வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 8 ஆயிரம் வீடுகள் விற்கப்படாமல் இருந்தது. இப்போது அதில் கொஞ்சம் விற்றுவிட்டது. விற்க முடியாத வீடுகளை வாடகைக்கு விட முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ஒரு புதிய கட்டிடம் கட்டுவதற்காக செல்லும்போது, அந்த இடத்தில் வரவேற்பு இருக்குமா? என்று ஆராய வேண்டும். தனியாரை ஒப்பிடுகையில் தரத்தில் குறைவாக அரசின் கட்டிடங்கள் இருந்துவிடக்கூடாது. இதனை வீட்டு வசதி வாரியத்தின் கொள்கைகளாக ஏற்று செயல்பட்டு வருகிறோம்.