மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதல்:2 கட்டிட தொழிலாளர்கள் படுகாயம்
ஆறுமுகநேரியில் மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதியதில் 2 கட்டிட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்த பொன் பாண்டியன் மகன் வெங்கடேஷ் (வயது 38). இவருடைய அண்ணன் மகன் பாலசரவணன். இருவரும் கட்டிட தொழிலாளர்கள்.
சம்பவத்தன்று இருவரும் பால சரவணன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு இரவு 9.45 மணிக்கு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். காமராஜபுரம் அருகே சென்ற போது எதிரே வந்த மினிவேன் மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். அந்த 2பேரும் மீட்கப்பட்டு காயல்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.