சுருளி அருவி பகுதியில் 3-வது நாளாக காட்டு யானைகள் நடமாட்டம்
சுருளி அருவி பகுதியில் 3-வது நாளாக காட்டு யானைகள் நடமாட்டம் இருந்தது.
தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக சுருளி அருவி விளங்குகிறது. தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், மூணாறு வரும் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் சுருளி அருவிக்கு வந்து செல்கின்றனர். சுருளி அருவி வனப்பகுதியில் உள்ளதால் அவ்வப்போது காட்டு யானைகள் அருவி பகுதிக்கு உலா வருவது வழக்கம். அப்போது சுற்றுலா பயணிகள் அருவிக்கு ெசல்ல வனத்துறையினர் தடைவிதிப்பார்கள்.
இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக சுருளி அருவி பகுதிக்குள் நுழைந்தது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். ேமலும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் காட்டு யானைகள் செல்ல மறுத்து அங்கேயே முகாமிட்டுள்ளது. நேற்று 3-வது நாளாக காட்டு யானைகள் அருவி பகுதியில் உலா வந்தன. அவற்றை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காட்டு யானைகள் நடமாட்டம் எதிரொலியாக நேற்று 3-வது நாளாக சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.