முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
முதுகுளத்தூர்,ஆக,12-
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகப்பிரியா ராஜேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கண்ணகி ஜெகதீசன், ஆணையாளர்கள் ஜானகி, அன்பு கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார். கவுன்சிலர் சசிகலா முருகன் பேசுகையில் கருமல் ஊருக்குள் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.ஆர்.என். பழங்குளம் கிராமத்தில் செயல்படும் அங்கன்வாடி கட்டிடம் மிக மோசமாக உள்ளதால் இதனை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றார்.
இதை தொடர்ந்து கவுன்சிலர் லட்சுமி பேசும் போது, கீழத்தூவல் கண்மாய் அருகில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். மைக்கேல் பட்டினம் கிராமத்தில் அன்றாட பயன்படுத்துவதுக்கு கூட தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அந்த கிராமத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர் அர்ஜுனன் பேசும் போது, எங்கள் பகுதிக்கு இதுவரை எந்த ஒரு நிதியும் வழங்கவில்லை. பொதுமக்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர், ரோடு வசதி, மின்சார வசதி உள்ளிட்டவைகளை என்னால் எதுவும் செய்து தர முடியவில்லை என்றார்.
இதற்கு ஆணையாளர் ஜானகி கூறுகையில், போதுமான நிதி வந்தவுடன் அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக பணியாளர் சிவகாமி நன்றி கூறினார