ராணி வேலுநாச்சியார் வரலாறு குறித்த இசை நாட்டிய நிகழ்ச்சி

சிவகங்கையில், ராணி வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த இசை நாட்டிய நிகழ்ச்சியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கையில், ராணி வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த இசை நாட்டிய நிகழ்ச்சியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
ராணி வேலுநாச்சியார்
இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிரத்து மாமன்னர் மருதுபாண்டியர்களின் உதவியுடன் முதன்முதலில் சுதந்திர போரை தொடங்கி வெற்றி கண்டவர் சிவகங்கை சீமையை ஆண்ட ராணி வேலு நாச்சியார் ஆவார். இவர் ஜான்சி ராணிக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திர போரை தொடங்கியவர். இவரது வாழ்கை வாரலாறு பற்றிய இசை நாட்டிய நிகழ்ச்சியை கடந்த 13-ந் தேதி சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையொட்டி ராணி வேலு நாச்சியார் ஆண்ட சிவகங்கையில் அவர் வாழ்ந்த அரண்மனையில் இசை நாட்டிய நிகழ்ச்சி அரசின் சார்பில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். ராணிவேலு நாச்சியாரின் வாரிசுதாரரான ராணி மதுராந்தகி நாச்சியார் மற்றும் இளையமன்னர் மகேஷ்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் வரவேற்றார்.
வாழ்க்கை வரலாறு
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:- சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட தமிழர்களின் பங்கு குறித்தும், வீரர்களின் தியாகம் குறித்தும், போராட்டங்கள் குறித்தும், வீரம், கலாசாரம், பண்பாடு குறித்தும் இன்றைய தலைமுறை அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடுத்து வருகிறார். இதில் முக்கியமானவர் ராணி வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை வரலாறை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சென்னையை சேர்ந்த ஸ்ரீராம்சர்மா என்பவர் இசை நாட்டியமாக தயாரித்துள்ளார். இதில் 60-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு பெற்றுள்ளனர். ஈரோடு, திருச்சி, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக வேலுநாச்சியார் வாழ்ந்த அரண்மனை வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்று, சிவகங்கை மண்ணிற்கு மேலும் பெருமை சோ்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பங்கேற்றவர்கள்
இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), பி.ஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை), வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட தி.மு.க. துனை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், சிவகங்கை நகரசபை தலைவர் துரைஆனந்த், துணை தலைவர் கார்கண்ணன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலர் நாகராஜபூபதி, வட்டாட்சியர் தங்கமணி, மன்னர் பள்ளிகளின் செயலர் குமரகுரு, தேவஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 2 மணி நேரத்திற்கு ராணி வேலுநாச்சியாரின் வாழக்கை வரலாறு, அவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றது போன்ற நிகழ்வுகள் இசை நாடகமாக காண்பிக்கபட்டது.