கோவில் முகூர்த்தக்கால் நடும் விழாவில் முஸ்லிம்கள் பங்கேற்பு


கோவில் முகூர்த்தக்கால் நடும் விழாவில் முஸ்லிம்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பாசிப்பட்டினத்தில் மதநல்லிணக்கமாக கோவில் முகூர்த்தக்கால் நடும் விழாவில் முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

ராமநாதபுரம்

பாசிப்பட்டினம்,

திருவாடானை தாலுகா பாசிப்பட்டினத்தில் வன்னியர் படையாட்சி சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட வல்லப விநாயகர் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாதம் 12-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பாத்தியா ஓதினர். அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் வன்னியர் படையாட்சி சமுதாய கிராம தலைவர் ஆறுமுகம், பாசிப்பட்டினம் ஜமாத் தலைவர் காமீதுமைதீன், ஊராட்சி மன்ற தலைவர் உம்முசலீமா நூருல் அமீன், முன்னாள் ஊராட்சி தலைவர் மாதவன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அமீர் கான் உள்பட வன்னியர் படையாட்சி சமூகத்தினர், முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பாசிப்பட்டினத்தில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் மலுங்கு ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு திருவிழாவும் அனைத்து சமுதாய ஒற்றுமையுடன் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story