தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப் பந்தல் விழா
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம்:
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேனுபுரீஸ்வரர் கோவில்
கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. துர்க்கை அம்மன் தனி சன்னதியில் காட்சி தரும் இந்த கோவில் துர்க்கை அம்மன் கோவில் என சிறப்புடன் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் முத்துப்பந்தல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 14-ந் தேதி காலை கோவிலிலுள்ள ஞானவாவி குளத்தில், திருஞானசம்பந்தருக்கு, சுவாமி-அம்மன் காட்சி அளித்து திருமுலைப்பால் வழங்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
முத்துப் பந்தல் விழா
இரவு திருஞானசம்பந்தருக்கு பொற்றளம் அளித்து, அதனுடன் வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு திருஞானசம்பந்தருக்கு, இறைவன் வழங்கிய, முத்துக் கொண்டை, முத்துக் குடை, முத்து சின்னங்களுடன் வீதி உலாவும், இரவு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட முத்து திருவோடத்தில் திருஞானசம்பந்தர் வீதியுலாவும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துப்பந்தல் விழா நேற்று நடந்தது. முன்னதான காலை 7 மணிக்கு திருஞானசம்பந்தர் முத்துப் பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்து, தொடர்ந்து திருமேற்றளிகை கைலாசநாதர் கோவிலுக்கும், மதியம் 12 மணிக்கு திருசக்திமுற்றம் சக்திவனேஸ்வரர் கோவிலுக்கும், மதியம் 1 மணிக்கு பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கும் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
வீதி உலா
இரவு 8 மணிக்கு ஞானாம்பிகையம்மன் சமேத தேனுபுரீஸ்வரர் முத்து விமானத்தில் காட்சியளிப்பதும், இவர்களை திருஞானசம்பந்தர் எதிர்வணங்கி, முத்துப்பந்தல் நிழலில் வீதியுலா வலம் வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.