ஆசனூர் அருகேரோட்டை கூட்டமாக கடந்து செல்லும் யானைகள்வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

ஆசனூர் அருகே ரோட்டை கூட்டமாக யானைகள் கடந்து செல்கின்றன.
ஆசனூர் வனப்பகுதியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் வெளியேறின. பின்னர் அவை ஆசனூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கூட்டம், கூட்டமாக கடந்து சென்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் யானைகளை பார்த்ததும் பயந்து சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். ஒரு சிலர் யானைகளை பார்த்து சத்தம் எழுப்பியபடி தங்கள் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இதனால் யானைகள் ரோட்டை கடந்து செல்ல முடியாமல் தவித்தன. சிறிது நேரம் கழித்து மெதுவாக ரோட்டை கடந்து சென்றன. அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீராகியது. வாகனங்கள் அங்கிருந்து சென்றன.
இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினர் கூறும்போது, 'யானைகள் ரோட்டை கடந்து செல்லும்போது வாகனங்களில் ஒலியை எழுப்பியோ, கூக்குரலிட்டோ தொந்தரவு செய்ய கூடாது. அவ்வாறு செய்வதால் யானைகள் ஆவேசமடைந்து வாகன ஓட்டிகளை தாக்கக்கூடும். எனவே யானைகள் ரோட்டை கடக்கும்போது தொந்தரவு செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்' என்றனர்.