போடி அருகேமயான பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

போடி அருகே மயான பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தில் சுமார் 800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். மேலும் தோட்டங்களை ஒட்டியுள்ள கொட்டக்குடி ஆற்றின் பாதை வழியாக சென்று வந்தனர். இதில் பலர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர். இதனால் ஆக்கிரமிப்பை அகற்றி மயான பாதையை சீரமைத்து தர வேண்டும் என்று கலெக்டர் ஷஜீவனாவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், போடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரகுநாத சேதுபதி, போடி தாலுகா போலீசார் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அந்த பகுதியில் புதிதாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.