கூடலூர் அருகே புதர்மண்டிய வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்


கூடலூர் அருகே  புதர்மண்டிய வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்:  விவசாயிகள் வலியுறுத்தல்
x

கூடலூர் அருகே புதர்மண்டிய வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

தேனி

முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இரு போக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது

முல்லைப்பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, வீரபாண்டி, அரண்மனைப்புதூர் வழியாக வைகை அணையை சென்று அடைகிறது. இதன்மூலம் கூடலூர் பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கூடலூர் அருகே லோயர்கேம்ப் முதல் சட்ரஸ் பகுதி வரை 5 கிலோமீட்டர் தூரத்திற்கு முல்லைப்பெரியாற்றின் கரை பகுதிகளில் தனியார் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. மேலும் தண்ணீர் வரும் வாய்க்கால்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் வாய்க்கால்களில் தண்ணீர் வரும் பாதை சுருங்கிகொண்டே வருகிறது. இதன் எதிரொலியாக முல்லைப்பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் விவசாய பணிகளுக்கு போதுமானதாக இல்லை.

குறிப்பாக பொட்டிவாய்க்கால் பாலம், சாமிவாய்க்கால், வைரவன் வாய்க்கால், தாமரைகுளம் வாய்க்கால், பாரவந்தான் உள்ளிட்ட வாய்க்கால்களில் முட்புதர்கள் அதிகம் வளர்ந்து தண்ணீர் வரும் பாதைகளை அடைத்துள்ளது. இதற்கிடையே 2-ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story