ஓட்டப்பிடாரம் அருகேலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்;பட்டதாரி வாலிபர் சாவு


ஓட்டப்பிடாரம் அருகேலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்;பட்டதாரி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பட்டதாரி வாலிபர் பரிதாபமாக பலியானார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பட்டதாரி வாலிபர் பரிதாபமாக பலியானார். இவர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

எம்.காம் பட்டதாரி

கடம்பூர் அருகே உள்ள கோடங்கால் கிராமத்தை சேர்ந்த செல்லையா மகன் மந்திரமூர்த்தி (வயது 23). எம்.காம் பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் காலையில் தூத்துக்குடியில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத மோட்டார் ைசக்கிளில் சென்றார். தேர்வு எழுதிவிட்டு மாலையில் நண்பர்களுடன் தூத்துக்குடியில் சில இடங்களுக்கு சென்றார்.

நேற்று இரவு 11 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து குறுக்குசாலை வழியாக மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வாலசமுத்திரம் அருகே வந்தபோது, முன்னால் பெங்களூருவுக்கு மரப்பலகை லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

லாரி மீது மோதல்

கண் இமைக்கும் நேரத்தில் அவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அந்த லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மந்திரமூர்த்தி பலத்த காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்த மந்திரமூர்த்தியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சாவு

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் கந்தசுப்புவை (30) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story