தேனி ரெயில் நிலையம் அருகே குட்டையில் ஆண் பிணம் மீட்பு

தேனி ரெயில் நிலையம் அருகே உள்ள குட்டையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது.
தேனி ரெயில் நிலையம் அருகில் ரெயில்வே குட்செட் அமைப்பதற்காக மண் எடுக்கப்பட்ட பகுதி பெரிய பள்ளமாக மாறியது. அந்தப் பள்ளத்தில் சுமார் 30 அடி ஆழத்தில் தண்ணீர் தேங்கி குட்டையாக காட்சியளிக்கிறது. இந்த நீர் குட்டையில் ஆபத்தான முறையில் பலர் குளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை இந்த குட்டையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. அதை பார்த்த மக்கள் தேனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பிணத்தை மீட்பதற்காக தேனி தீயணைப்பு படை வீரர்களும் அங்கு வந்தனர். அவர்கள், பிணத்தை மீட்டனர்.
பிணமாக கிடந்தவர் கழுத்தில் துளசி மற்றும் ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார். அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அதே பகுதியில் அவருடைய உடைமைகள் கிடந்தன. அதை போலீசார் சோதனையிட்டபோது, அதற்குள் ஆடைகள், பட்டு சால்வைகள், பூஜை பொருட்கள் போன்றவை இருந்தன. குட்டையில் இறங்கி குளித்த போது அவர் நீரில் மூழ்கி இருந்திருக்கலாம் என்று தெரிய வருகிறது. அவருடைய உடைமைகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.