திருச்செந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

திருச்செந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
திருச்செந்தூர்:
ஆறுமுகநேரி காமராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மனைவி கனியம்மாள் (வயது 50). இவர் தனது மகனுக்கு பெண் பார்ப்பதற்காக, ராஜமணியபுரத்தை சேர்ந்த சிவபெருமாள் மனைவி ஜோதி (35) என்பவருடன் நேற்று முன்தினம் பகலில் மோட்டார் சைக்கிளில் உவரிக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ஜோதி ஓட்டியுள்ளார். திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் மெயின் ரோட்டில் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த மூன்று சக்கர சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மூன்று சக்கர சைக்கிளை ஓட்டி சென்ற சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. மோட்டார் சைக்கிளில் சென்ற ஜோதி, கனியம்மாளும் கீழே விழுந்ததில் காயமடைந்தனர். சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சென்று முதியவரின் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.