விளாத்திகுளம் அருகே கண்மாயில் மூழ்கிய தொழிலாளி

விளாத்திகுளம் அருகே கண்மாயில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த தொழிலாளி திடீரென்று கண்மாயில் மூழ்கினார். அவரை தேடும் பணி நேற்று 2-வது நாளாக நடந்தது. அவரை பற்றி துப்பு கிடைக்காததால் உறவினர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
தொழிலாளி
விளாத்திகுளம் அருகே உள்ள நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 35). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் தனது நண்பர்கள் 2 பேருடன் அதே பகுதியில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவர் சற்று ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது திடீரென்று தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
தேடும் பணி
இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் 2 பேரும் கண்மாய் தண்ணீரில் நீண்டநேரம் தேடி பார்த்தனர். ஆனால் அவரை பற்றிய தடயம் ஏதும் சிக்கவில்லை. பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விளாத்திகுளம் தீயணைப்பு வீரர்கள் கண்மாய்க்கு விரைந்து வந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் நீந்தி சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஐயப்பன் பற்றிய விவரம் தெரியவில்லை. இந்த நிலையில் இரவு நேரமாகி விட்டதால் முதல்நாள் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
உறவினர்கள் சோகம்
தொடர்ந்து நேற்று 2-வது நாளாக கண்மாயில் ஐயப்பனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
மேலும் தூத்துக்குடியில் இருந்து முத்து குளிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு, அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மாலை வரை வரை ஐயப்பன் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவர்களும் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பினர். இது அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.