நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட் ரோட்டை சீரமைக்க வேண்டும்; மேயரிடம், வியாபாரிகள் மனு


நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட் ரோட்டை சீரமைக்க வேண்டும்; மேயரிடம், வியாபாரிகள் மனு
x

நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட் ரோட்டை சீரமைக்க வேண்டும் என மேயரிடம், வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட் ரோட்டை சீரமைக்க வேண்டும் என மேயரிடம், வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

மாநகராட்சி கூட்டம்

நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

நெல்லை மாவட்ட மொத்த பூ கமிஷன் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் மனு கொடுத்தனர். அதில், நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகம், கோவில், கண் ஆஸ்பத்திரி ஆகியவை இருப்பதால் பொதுமக்கள் அதிகமானோர் வந்து செல்கிறார்கள். எனவே சந்திப்பு முதல் பூ மார்க்கெட் வழியாக கண் ஆஸ்பத்திரி வரை உள்ள இணைப்பு சாலையில் சிமெண்டு ரோடு அமைத்து தர வேண்டும். மேலும் அங்கு தெருவிளக்கும் அமைத்து கொடுக்க வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.

பெயர் பலகை

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. புதிய காலனி மக்கள் நல சங்கத்தினர் அளித்த மனுவில், "என்.ஜி.ஓ. காலனி பகுதிகளில் தெருக்களில் பெயர் பலகை அமைக்க வேண்டும்'' என்று கூறி இருந்தனர்.

நெல்லை மண்டல காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் கொடுத்த மனுவில், ''டவுன் பகுதியில் 22-வது வார்டு முதல் 25-வது வார்டு வரை உள்ள பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. அவற்றை பிடித்து அப்புறப்படுத்தவும், சீரான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.

மேலப்பாளையம் நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சங்கத்தினர் அளித்த மனுவில், ''மேலப்பாளையத்தின் சிறந்த நீர் ஆதாரமான கன்னிமார் குளத்தை பாதாள சாக்கடை கழிவுகளில் இருந்து மீட்க வேண்டும். சாக்கடை கழிவு கலக்காமல் பாதுகாக்க வேண்டும்'' என்று கூறிஇருந்தனர்.

குடிநீரில் கழிவுநீர்

அ.ம.மு.க. வார்டு செயலாளர் சரவணன் தலைமையில் கோட்டூர் ரோடு பகுதி மக்கள் அளித்த மனுவில், ''கோட்டூர் ரோடு தெருக்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனை தடுத்து தரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு விளக்கு இல்லாத பகுதிகளில் தெரு விளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும்'' என்று கூறி இருந்தனர்.

கூட்டத்தில் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் பாஸ்கர், வாசுதேவன், உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், ஜஹாங்கீர் பாஷா, உதவி செயற்பொறியாளர் லெனின் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story