தொழில் தொடங்க நிதி உதவி

தொழில் தொடங்க நிதி உதவி
திருப்பூர்
மத்திய அரசின் கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலம் தனிப்பட்ட தொழில்முனைவோர், தனியார் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உழவன் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் தொழில் தொடங்க நிதி உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பால் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பு, இறைச்சி பதப்படுத்துதல் மற்றம் மதிப்புக்கூட்டல் உள்கட்டமைப்பு, கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், மாட்டினம் மேம்பாட்டு தொழில்நுட்பம் மற்றும் கால்நடை இனப்பெருக்க பண்ணை அமைத்தல், கால்நடை தடுப்பூசி மற்றும் மருந்துகள் உற்பத்தி ஆலை அமைத்தல், விலங்கு கழிவுகள் மூலம் மேம்படுத்தப்பட்ட பொருட்கள் தயாரித்தல் ஆகிய தொழிலுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் மாடு, எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி மற்றும் கோழி இனங்களுக்கு தரமான செறிவூட்டப்பட்ட தீவனம் மற்றும் மலிவு விலையில் சமச்சீர் உணவு வழங்க முடியும். மொத்த திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனாக பெற முடியும். சிறு, குறு தொழில்கள் தொடங்க பயனாளிகள் பங்களிப்பாக 10 சதவீதம் முதல் 15 சதவீதம் தொகையும், மீதம் உள்ள இனங்களில் 25 சதவீதம் பங்குத்தொகையும் அளிக்கப்பட வேண்டும். 3 சதவீதம் வட்டி குறைப்புக்கு அனைத்து தொழில்முனைவோரும் தகுதியானவர்கள் ஆவார்கள்.
விரிவான திட்ட அறிக்கையை ifapidhttp://www.nim.udyamimitra.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். தகுதியான விண்ணப்பங்கள் வங்கிக்கடனுக்கு பரிந்துரைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
----