திருப்பூரில் பொலிவுபடுத்தப்பட்ட பழைய பஸ் நிலையம் இன்று திறப்பு


திருப்பூரில் பொலிவுபடுத்தப்பட்ட பழைய பஸ் நிலையம் இன்று திறப்பு
x
திருப்பூர்


திருப்பூரில் வாரச்சந்தை, மலர் சந்தை, பல அடுக்கு வாகன நிறுத்தம், பொலிவுபடுத்தப்பட்ட பழைய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலமாக இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறார்.

பொலிவுபடுத்தப்பட்ட பஸ் நிலையம்

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் திருப்பூர் பழைய பஸ் நிலையம் ரூ.38 கோடியே 81 லட்சம் மதிப்பில் புதுப்பொலிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் 84 கடைகள், 2 உணவகங்கள், ஒரு உணவு விற்பனையகம், 2 ஏ.டி.எம். எந்திர அறை, பாலூட்டும் அறை, 50 வாட் திறன் கொண்ட சூரிய மின்தகடுகள், சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர், நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைவழி மேம்பாலம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 22 ஆண்கள் கழிப்பிடம், 20 பெண்கள் கழிப்பிடம், 12 மாற்றுத்திறனாளி கழிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளன.

இதுபோல் ரூ.19 கோடியே 7 லட்சம் மதிப்பில் பல அடுக்கு வாகன நிறுத்தம், ரூ.12 கோடியே 86 லட்சம் மதிப்பில் மேம்பாடு செய்யப்பட்ட வாரச்சந்தை, ரூ.4 கோடியே 69 லட்சம் மதிப்பில் மேம்பாடு செய்யப்பட்ட மலர் சந்தை ஆகியவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்

இதன் திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திறப்பு விழா நிகழ்ச்சி காலை 11 மணிக்கு நடக்கிறது. காணொலிக்காட்சி மூலமாக இணைகிறார்கள். இதில் மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலெக்டர் வினீத், துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் பங்கேற்கிறார்கள்.


Next Story