ரூ.99½ லட்சத்தில் புதிய வணிக வளாகம்

ரூ.99½ லட்சத்தில் புதிய வணிக வளாகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சி வேப்பங்கால் அருகே தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தச்சு கருமார அலகு இயங்கி வருகிறது. இந்த அலகில் அரசு அலுவலகங்களுக்கு தேவைப்படும் நாற்காலி, மேசை, டெஸ்க் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே வணிக வளாக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் பேசுகையில் தமிழ்நாடு கதர்கிராமத் தொழில் வாரிய தச்சு கருமார அலகு புதிய வணிக வளாக கட்டிடம் கட்டுவதற்கு ரூ.99½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் எனறார்.
இந்த நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பாபு, பள்ளிகொண்டா நகர செயலாளர் ஜாகிர் உசேன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் வசீம்அக்ரம், முன்னாள் நகர செயலாளர் செல்வம் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைவர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.