ராமநாதபுரத்தில் புதிய ரெயில்வே மேம்பால பணி
ராமநாதபுரத்தில் கீழக்கரை சாலையில் புதிதாக கட்டப்படும் ரெயில்வே மேம்பால பணியை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
ராமநாதபுரத்தில் கீழக்கரை சாலையில் புதிதாக கட்டப்படும் ரெயில்வே மேம்பால பணியை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
ரெயில்வே மேம்பாலம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற ஜானி டாம் வர்கீஸ், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து வந்த புகாரின்பேரில் ராமநாதபுரத்தில் சரிசெய்ய முடியாத நீண்டகால பிரச்சினைகள் உள்ள ராமநாதபுரம் நகராட்சி பஸ் நிலையத்தில் அடிப்படை மற்றும் சுகாதார வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ராமநாதபுரம் ரெயில் நிலையம் அருகில் கீழக்கரைக்கு செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தாமதமாகி வருவது குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற கலெக்டர், அங்கு குடிநீர், கழிப்பறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூடுதல் கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டார். பின் தலைமை மருத்துவ அலுவலர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் பொது மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
விரைந்து முடிக்க அறிவுரை
மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் சுகாதார வளாகங்களை அமைப்பதற்கும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தவும், புதிய மருத்துவமனை கட்டிட பணியை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கீழ் உள்ள ராமநாதபுரம் பெரிய கண்மாய் தென்கலுங்கினையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் ஜெயதுரை, ராமநாதபுரம் தாசில்தார் முருகேசன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மலர்வண்ணன், டாக்டர்கள் ஞானக்குமார், மனோஜ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.