குன்னூா் வெலிங்டனில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்-நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

குன்னூா் வெலிங்டனில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
குன்னூர்
குன்னூா் வெலிங்டனில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆக்கிரமிப்பு கட்டிடங்கள்
மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மேட்டுப்பாளையம் -ஊட்டி சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை துறையின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இதனை தொடர்ந்து குறுகலாக இருந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
குன்னூர் -ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெலிங்டன் பகுதியில் சாலை ஓரத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் உள்ளன. இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் வாகனங்கள் சென்று வரவும் இடையூறாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறை இந்த பகுதியிலுள்ள சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது.
நோட்டீஸ்
இதனடிப் படையில் சாலை ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற தேசிய நெடுஞ்சாலை துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது. அந்த நோட்டீசில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களை தாங்களாகவே அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் அகற்றப்படும். இதற்கு ஏற்படும் செல்வுகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களே ஏற்க நேரிடும். இதில் தங்களுக்கு ஆட்சேபனை இருப்பின் உரிய ஆதாரங்களுடன் ஊட்டி உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனறு கூறப்பட்டு இருந்தது.