பாலத்தில் படர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
கூத்தாநல்லூர் அருகே பாலத்தில் படர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே பாலத்தில் படர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள, மணக்கரையில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காகவும், வாகனங்கள் சென்று வருவதற்கு ஏதுவாகவும், வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை மணக்கரை, புள்ளமங்கலம், பாலக்குறிச்சி, சேந்தங்குடி, வடவேற்குடி, புத்தகரம், மாவட்டக்குடி, பொய்கைநல்லூர், ஊட்டியாணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், பள்ளி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் இந்த பாலத்தை கடந்து சென்று வருகின்றன.
படர்ந்துள்ள கருவேல மரங்கள்
இந்த நிலையில், பாலத்தின் கரையோரத்தில் ஆற்று பகுதியில் கருவேல மரங்கள் காடு போல படர்ந்து காணப்படுகிறது. இதில், ஒரு சில கருவேல மரங்கள், பாலத்தின் மேல் பகுதி வரை படர்ந்து, பாலத்தின் மையப் பகுதி வரை நீண்டு கொண்டே வருகிறது.இதனால், பாலத்தை கடந்து சென்று வரும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது கருவேல மரத்தில் உள்ள முள்கள் குத்தி காயம் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் பாலத்தை கடந்து செல்லும் போது, கருவேல மரங்கள் பாலத்தின் மையப் பகுதியில் இருப்பது தெரியாமல், அதில் உரசியபடியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், கருவேல மரத்தின் கிளைகள், பாலத்தின் மைய பகுதியில் படர்ந்து உள்ளதால், அதன் கிளைகளில் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் இருக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, பாலத்தின் மீது படர்ந்த வளர்ந்துளு்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.