நாமக்கல் அருகேபுலம் பெயர்ந்த தொழிலாளர்களின்60 குழந்தைகள் கண்டுபிடிப்பு
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை அடையாளம் காணுதல் குறித்து நாமக்கல் அருகே உள்ள சூரக்காபாளையம் மற்றும் வரப்பாளையம் பகுதிகளில் கோழிப்பண்ணை குடியிருப்புகளில் கள ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் 6 முதல் 14 வயது வரை உள்ள 40 பேரும், 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 20 பேரும் என மொத்தம் 60 குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.
இந்த கள ஆய்வில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன், தொழிலாளர் துணை ஆய்வாளர் மயில்வாகனன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், சைல்டுலைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கவிதா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சசிராணி, புள்ளியியல் அலுவலர் திருமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.
இந்த குழந்தைகளை வயதுக்கு ஏற்றாற்போல் அப்பிநாயக்கன்பாளையம், கோனூர் அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.