குடவாசலில், கல்லூரி கட்ட இடத்தை தாசில்தார் ஆய்வு


குடவாசலில், கல்லூரி கட்ட இடத்தை தாசில்தார் ஆய்வு
x

மாணவர்கள் போராட்டம் காரணமாக குடவாசலில், கல்லூரி கட்ட இடத்தை தாசில்தார் ஆய்வு செய்தார்.

திருவாரூர்

குடவாசல்;

மாணவர்கள் போராட்டம் காரணமாக குடவாசலில், கல்லூரி கட்ட இடத்தை தாசில்தார் ஆய்வு செய்தார்.

அரசு கல்லூரி

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 8 ஆண்டுகளாக குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரிக்கு கட்டிடம் கட்டிட அரசு போதுமான நிதி ஒதுக்கி உள்ள நிலையில் தற்போது இந்த கல்லூரியை திருவாரூர் தொகுதிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

காத்திருப்பு போராட்டம்

இதனால் குடவாசலில் கல்லூரிக்கான கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் சங்க நிர்வாகிகள் தலைமையில் மாணவர்கள் கடந்த 5 நாட்களாக குடவாசல் பஸ் நிலையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாணவர்கள் போராட்டத்துக்கு அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வர்த்தகர் நல கழகம், மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர்.நேற்று முன்தினம் கல்லூரி மாணவர்கள் போராட்டத்துக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆதரவு அளித்து மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தாசில்தார் ஆய்வு

இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் குடவாசல் தாசில்தார் குருநாதனிடம் குடவாசல் பகுதியில் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கான இடவசதி குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதன்பேரில் குடவாசல் அகர ஓசை பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை தாசில்தார் குருநாதன் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது கல்லூரி முதல்வர் மாரிமுத்து, மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், ஒன்றியக்குழு துணை தலைவர் தென்கோவன், கொரடாச்சேரி ஒன்றியக்குழு உறுப்பினர் பாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story