கல்வராயன்மலை உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்களிடம் அதிகாரிகள் விசாரணை


கல்வராயன்மலை உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்களிடம் அதிகாரிகள் விசாரணை
x

மாணவர்களுக்கு மதிய உணவு தட்டுப்பாடு ஏற்பட்ட விவகாரம் குறித்து கல்வராயன்மலை உண்டு உறைவிட பள்ளி மாணவ-மாணவிகளிடம் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை செய்தனர்

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

உணவு தட்டுப்பாடு

கல்வராயன்மலை கிளாக்காடு கிராமத்தில் உள்ள அரசு மலைவாழ் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கியபோது 100 மாணவ-மாணவிகளுக்கு உணவு இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் காலி பாத்திரங்களை கையில் வைத்துக்கொண்டு அவர்கள் பசியோடு பரிதவித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளி சமையலர்களிடம் தட்டிக்கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதன் பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் உணவு சமைத்து மாணவ-மாணவிகளுக்கு பரிமாறப்பட்டது.

கலெக்டர் உத்தரவு

இந்த நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்பாளர் செந்தமிழ் செல்வி தலைமையில் தாசில்தார் நடராஜன், கல்வராயன்மலை தனி தாசில்தார் இந்திரா ஆகியோர் நேற்று கிளாக்காடு கிராமத்தில் உள்ள அரசு மலைவாழ் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளிக்கு வந்தனர்.

பின்னர் உணவு தட்டுப்பாடு குறித்து சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் மதிய உணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாணவ-மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து பள்ளி கட்டிடங்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.


Next Story