கோவில்பட்டி கம்மவார் சங்கம் சார்பில்செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்
கோவில்பட்டி கம்மவார் சங்கம் சார்பில் செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் கம்மவார் சங்கம் சார்பில் நேற்று பங்குனி தேரோட்டம் நடந்தது.
பங்குனி தேரோட்டம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 5-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 9-ம் திருநாளை முன்னிட்டு கம்மவார் சங்கம் சார்பில் 48-ம் ஆண்டு தேரோட்ட திருவிழா நடத்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும், 6 மணிக்கு விளா பூஜையும், 7.35 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு அபிஷேகமும், தொடர்ந்து தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது.
காலை 8.15 மணிக்கு கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள கம்மவார் திருமண மண்டபம் முன்பிருந்து செண்டை மேளம் முழங்க கம்மவார் சங்க நிர்வாகிகள், சமுதாய மக்கள், இளைஞர் அணியினர் தேர் வடம் பிடிக்க ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நிகழ்ச்சி தொடங்கியது.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சிக்கு கம்மவார் சங்கத் தலைவர் ரீஜென்ட் எஸ். ஹரி பாலகன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் வக்கீல்.எம். அழகர்சாமி, பொருளாளர் என். ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர் பொன்ராஜ், துணை தலைவர்கள் எஸ். பட்டுராஜன், எல்.ஆர்.ஜெனரேஸ், இணைச் செயலாளர்கள் வி.லட்சுமணன், ஜி.செந்தில்குமார், துணை செயலாளர்கள் மாரிச்சாமி, அய்யலுசாமி, முன்னாள் தலைவர்கள் ஆர்.வி.எஸ். துரைராஜ், எஸ். வெங்கடேஷ்சென்னகேசவன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ, கே. ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. ஆர். அருணாச்சலம், நகரசபை தலைவர் கா. கருணாநிதி, பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் இந்துமதி கவுதமன், இந்து அறநிலையத் துறை மண்டல இணை இயக்குனர் ம. அன்புமணி, உதவி ஆணையாளர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவ கலைப் பிரியா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மூப்பன்பட்டி தேர்த்தடி முறையதாரர்கள் புவனேஸ்வரன் தலைமையில் தேர் தேடி நடத்தினார்கள். முதலில் பூவன நாத சுவாமி தேரும், தொடர்ந்து அம்மன் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. தேர்கள் கோவில் ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பகல் 12.15 மணி மற்றும் 12. 30 மணிக்கு நிலையை அடைந்தன. பக்தர்களுக்கு கம்மவார் சங்கம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
தெப்பத்திருவிழா
பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரெண்டு வெங்கடேஷ் செய்திருந்தார். மாலை 6 மணிக்கு முன்னாள் தலைவர் பி. ஆர். சீனிவாசன் ஏற்பாட்டில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கம்மவார் சங்கத் தலைவர் ரீஜென்ட் எஸ். ஹரிபாலகன் தலைமை தாங்கினார். செயலாளர் வக்கீல். எம். அழகர்சாமி, பொருளாளர் என். ராதா கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு ஆயிர வைசிய காசுக்காரர் செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் காலை 8 மணிக்கு சுவாமி- அம்பாள் திருவீதி உலாவும், மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து யானை, அன்ன வாகனத்தில் சுவாமி- அம்பாள் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) 11-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் மாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி- அம்பாள் திருவீதி உலாவும், இரவு 7 மணிக்கு கோவில் திருக்குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது. விழாவை யொட்டி காமராஜர் சிலை முன்பு நெல்லை எஸ். ஆர். சந்திரன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.