மதுரை அரசு மருத்துவ கல்லூரி சார்பில்ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி- 23-ந்தேதி நடக்கிறது


மதுரை அரசு மருத்துவ கல்லூரி சார்பில்ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி- 23-ந்தேதி நடக்கிறது
x

மதுரை அரசு மருத்துவ கல்லூரி சார்பில் ரத்த தான தினத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் 23-ந்தேதி நடக்கிறது.

மதுரை


மதுரை அரசு மருத்துவ கல்லூரி சார்பில் ரத்த தான தினத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் 23-ந்தேதி நடக்கிறது.

ரத்த தான தினம்

ஒவ்வொரு வருடமும், ஜூன் மாதம் 14-ந்தேதி உலக ரத்த தான தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் ரத்த தானம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ரத்த தான தினத்தையொட்டி, மதுரை மருத்துவ கல்லூரியின் சார்பில் வருகிற 23-ந்தேதி மாரத்தான் போட்டிகள் நடக்கிறது.

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியில் ஒரே சமயத்தில் 3 ஆயிரம் யூனிட் ரத்தத்தை சேமித்து வைக்கமுடியும். தமிழகத்தின் 2-வது பெரிய ரத்த வங்கியாக மதுரை அரசு ஆஸ்பத்திரி திகழ்கிறது. இங்கு, ஆண்டுக்கு 25 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்படுகிறது. அந்த ரத்தம் சுமார் 60 ஆயிரம் நோயாளிகள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கு செலுத்தப்படுகிறது. அதாவது ஒருவரிடம் இருந்து சராசரியாக சேகரிக்கப்படும் 350 மி.லி. ரத்தமானது, அதி நவீன கருவிகள் மூலம் பகுப்பாய்வு செய்து, ரத்த சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள், பிளாஸ்மா என 3 ஆக பிரிக்கப்படுகிறது. இதில் எந்த நோயாளிகளுக்கு எது தேவை என்பதை அறிந்து, அவர்களுக்கு அது தனியாக பிரித்து வழங்கப்படுகிறது.

மாரத்தான் போட்டிகள்

நாளுக்கு நாள் ரத்தத்தின் தேவை அதிகரித்து கொண்டே வருவதால் அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், "உதிரம் 23 மாரத்தான்" என்ற தலைப்பில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக மாரத்தான் போட்டிகள் வருகிற 23-ந்தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது.

இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொள்கிறார். அனுமதி இலவசம். ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு தனித்தனியாக, முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கு தனியாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதாவது, www.UTHIRAM23.COMஎன்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் முன்பதிவு செய்யும் 1,500 பேருக்கு டிசர்ட் வழங்கப்படுகிறது.

10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த மாரத்தான் போட்டி, மதுரை மருத்துவ கல்லூரியில் தொடங்கி, அரவிந்த் கண்மருத்துவமனை, வைகை ஆற்று சாலை, தெப்பக்குளம், அப்போல்லோ ஜங்சன், கே.கே.நகர் பார்க், பூ மார்க்கெட், ராஜா முத்தையா மன்றம், காந்தி மியூசியம் வழியாக மீண்டும் அரசு மருத்துவ கல்லூரியில் நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் தலைமையில் டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் செய்து வருகின்றனர்.

இந்த போட்டியில் அனைவரும் கலந்து கொள்வதுடன் மட்டுமின்றி, தானாக முன்வந்து ரத்த தானம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story