நாம் தமிழர் கட்சி சார்பில் பி.கே. மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்- சீமான் பங்கேற்பு

நாம் தமிழர் கட்சி சார்பில் பி.கே. மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் சீமான் பங்கேற்றார்
உசிலம்பட்டி
பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் பி.கே. மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் உசிலம்பட்டியில் நடைபெற்றது. முன்னதாக மூக்கையாத் தேவரின் பிறந்த ஊரான பாப்பாபட்டிக்கு சென்ற சீமான் அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமானுக்கு கள்ளர் நாடு அறக்கட்டளையின் சார்பில் அதன் நிர்வாகிகள் வளவாத்தேவன், சோலை ஹரி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வீரவாள் ஈட்டி ஆகியவற்றை பரிசாக வழங்கினர். அதன் பின்னர் பேசிய சீமான் பி.கே.மூக்கையாத்தேவர் சாதிய தலைவர் அல்ல அவர் தேசத் தலைவர். இந்த பகுதியில் உள்ள ஏழை மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கல்லூரிகள் நிறுவினார். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று கல்வி கற்றுக் கொள்ளலாம். குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளையும் கல்வி கற்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.