லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில்இரைக்காக காத்திருக்கும் குரங்குகள்

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் குரங்குகள் இரைக்காக காத்திருந்தன.
தமிழக-கேரள எல்லைப்பகுதியில், தேனி மாவட்டம் கூடலூர் நகரம் அமைந்துள்ளது. கூடலூர் நகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட பகுதியான லோயர்கேம்பில் இருந்து, குமுளி வரை 6 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை ஆகும். இந்த மலைப்பாதை வழியாக கேரள மாநிலத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் தொழிலாளர்களை ஏற்றி செல்கின்றனர். இதேபோல் தேக்கடி செல்லும் சுற்றுலா பயணிகளும் அந்த வழியாக வாகனங்களில் சென்று வருகிறார்கள்.
தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் நீர்நிலைகள் வறண்டு விட்டன. இதனால் தண்ணீர் மற்றும் இரைதேடி மலைப்பாதைக்கு வனவிலங்குகள் வந்த வண்ணம் உள்ளன. சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் மலைப்பாதையில் இரை தேடி காத்திருக்கின்றன. அந்த வழியாக செல்வோர் வாகனங்களை நிறுத்தி குரங்குகளுக்கு பழங்கள், சாதம், தின்பண்டங்களை கொடுக்கின்றனர். அவற்றை போட்டி போட்டு குரங்குகள் தின்கின்றன. சில சமயத்தில், குரங்குகள் ஒன்றுக்கொன்று சண்டையிடும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.
இதேபோல் சில குரங்குகள், குட்டிகளுடன் மலைப்பாதையை கடப்பதால் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மலைப்பாதையில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.