மகாசிவராத்திரி விழாயொட்டி பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாயொட்டி பக்தர்கள் விடிய, விடிய கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாயொட்டி பக்தர்கள் விடிய, விடிய கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
இந்த கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, சித்ரா பவுர்ணமி, திருவூடல் விழா உள்பட பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது.
அதேபோல் மகா சிவராத்திரி விழாவும் இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும். திருமாலும், பிரம்மாவும் சிவபெருமானின் அடி முடி காணாமல் திகைத்த போது அவர் லிங்கோத்பவ மூர்த்தியாக அருள்பாலித்த திருநாளே மகா சிவராத்திரி என்று கூறப்படுகிறது.
மகா சிவராத்திரி உருவான திருத்தலம் என்ற தனிச்சிறப்பு பெற்றது திருவண்ணாமலை.
இந்த ஆண்டிற்கான மகாசிவராத்திரி விழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவிலில் நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலில் காலை முதல் மதியம் வரை பல்வேறு வண்ண மலர்களால் சாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.
லட்சார்ச்சனைக்காக டிக்கெட் எடுத்து இருந்த பக்தர்கள் அர்ச்சனை செய்வதற்காக நீண்ட வரிசையில் கையில் பூக்கூடையுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
4 கால பூஜை
மேலும் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதியது. மாலைக்கு பின் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் கொடிமரத்தின் அருகில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மேலும் கோவிலில் சாமி சன்னதியில் உள்ள லிங்கோத்பவ மூர்த்தி சன்னதிமுன்பு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
சிவராத்திரியையொட்டி இரவு முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வரை 4 கால பூஜைகளும் நடைபெற்றது.
முதல் கால பூஜையை பிரம்மாவும், 2-ம் கால பூஜையை திருமாலும், 3-ம் கால பூஜையை உமையாளும், 4-ம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் செய்ததாக ஐதீகம் உள்ளது.
மேலும் கோவிலில் பக்தர்கள் எந்தவித சிரமமன்றி விரைந்து தரிசனம் செய்ய கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசன வழியில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நள்ளிரவு 12 மணிக்கு சாமி சன்னதியின் பின்பகுதியில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் மட்டும் லிங்கோபவருக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும்.
பின்னர் தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.
நாதஸ்வரம் கலைஞர்களின் நிகழ்ச்சி
மேலும் கோவிலின் ராஜகோபுரம் முன்பு மகாசிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ்வரம், தவில் இசை சங்கத்தின் சார்பில் உலக அமைதிக்காக தலைவர் பிச்சாண்டி தலைமையில்100-க்கும் மேற்பட்ட நாதஸ்வரம், தவில் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி இன்று காலை 5 மணி முதல் நாளை அதிகாலை 5 வரை விடிய, விடிய நடைபெற்றது.
அதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
சிவராத்திரியை முன்னிட்டு கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி ஆயிரகணக்கானோர் கிரிவலம் சென்றனர்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் இன்று காலை வரை விடிய, விடிய கிரிவலம் சென்றனர். இன்று பகலில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
பின்னர் மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இசை நிகழ்ச்சி
இந்த ஆண்டு முதல்முறையாக திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் ஈசான்ய மைதானத்தில் மகா சிவராத்திரி விழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் மாலை 6 மணியில் தொடங்கியது.
இதில் அருணாசலேஸ்வரர் கோவில் ஆஸ்தான நாதஸ்வர கலைஞர்களின் மங்கள இசை நிகழ்ச்சியும், ஓதுவார்கள் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களின் திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சியும், கயிலாய வாத்திய நிகழ்ச்சியும்,
பரதநாட்டிய நிகழ்ச்சியும், சாமியாட்டம், பட்டிமன்றம், நையாண்டி மேள நிகழ்ச்சியும், நாட்டிய நாடகம், தப்பாட்டம் நிகழ்ச்சியும், இசை சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகள் அதிகாலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற்றது. .
இதற்கான ஏற்பாடு அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.