உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வருகி 22-ந் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு கிராமசபை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலக தண்ணீர் தினமான வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் காலை 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும். அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கீழ்குறிப்பிட்டுள்ள பொருள்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.
உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் (2023-24), தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் இதர பொருட்கள்.
பார்வையாளர்கள்
இந்த கிராம சபைக் கூட்டங்களில் பார்வையாளர்களாக தாசில்தார்கள் கலந்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.