பூட்டி கிடக்கும் கழிவறை திறக்கப்படுமா?

பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலக வளாகத்தில் பூட்டி கிடக்கும் கழிவறை திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலக வளாகத்தில் பூட்டி கிடக்கும் கழிவறை திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
அலுவலகங்கள்
பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், ஆதிதிராவிட நலத்துறை அலுவலகம், வணிகவரி அலுவலகம், சார் நிலை கருவூலம், இ.சேவை மையம் ஆகியவை இயங்கி வருகின்றன. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க அமைக்கப்பட்ட பொது கழிவறை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறையை சுற்றிலும் புதர் மண்டி காட்சியளிக்கிறது.
நடவடிக்கை
எனவே பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் இயற்க உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். தாசில்தார் அலுவலகத்தின் பின்புறம் அதிக அளவில் புதர்கள் மண்டி உள்ளது. புதர்களில் இருந்து விஷஜந்துக்கள் வர வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் உபயோகத்துக்காக கழிப்பிடத்தை சுத்தம் செய்து தண்ணீர் வசதி செய்து கொடுத்து பொது மக்கள் உபயோகத்துக்கு திறந்து விட வேண்டும். மேலும் அலுவலகங்களை சுற்றி உள்ள புதர்களை அழிக்க வேண்டும். அலுவலகங்களில் தினந்தோறும் சேருகின்ற குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பை தொட்டிகள் வைத்தும் பராமரிக்க வேண்டும். மேலும் அங்கு சேருகின்ற குப்பைகளை பட்டுக்கோட்டை நகராட்சி மூலம் தினந்தோறும் வாகனங்கள் மூலமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.