தூய்மை பணிக்கு ஒப்பந்ததாரரை நியமிப்பதற்கு எதிர்ப்பு: ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


தூய்மை பணிக்கு ஒப்பந்ததாரரை நியமிப்பதற்கு எதிர்ப்பு: ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

தூய்மை பணிக்கு ஒப்பந்ததாரர் நியமிக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஈரோடு

தூய்மை பணிக்கு ஒப்பந்ததாரர் நியமிக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநகராட்சி கூட்டம்

ஈரோடு மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை அதாவது தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்வதற்கான ஒப்பந்ததாரரை நியமிக்கும் நடவடிக்கை நடந்து வருகிறது. இதற்கு மாநகராட்சியில் பணியாற்றி வரும் சுயஉதவிக்குழு தூய்மை பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று மாநகராட்சி மன்ற அவசர கூட்டம் நடந்தது.

மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், துணை மேயர் வி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒப்பந்ததாரர் தீர்மானம்

இந்த கூட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் செயல்படுவதற்கு ஒப்பந்ததாரர்களை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுபோல் பெரும்பள்ளம் ஓடைக்கரையில் குடியிருந்தவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் வகையில் சித்தோடு அருகே உள்ள நல்லாகவுண்டன்பாளையத்தில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் சூரியம்பாளையம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை புனரமைப்பு செய்து குடிநீர் வினியோகம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க. வெளிநடப்பு

இந்த தீர்மானங்கள் மீது நடத்தப்பட்ட விவாதத்தின் போது, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அ.தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து பேசும்போது, ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் தனியார் நிறுவனத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், எந்த ஒரு பகுதியில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டாலும் அதை அவர்கள் சரி செய்வது இல்லை. இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. இந்தநிலையில் தூய்மை பணியையும் தனியார் ஒப்பந்ததாரருக்கு வழங்குவது ஏற்புடையது அல்ல என்றார்.

அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகதீசன் பேசும்போது, சித்தோடு பேரூராட்சி மாநகராட்சிக்கு வெளியே உள்ளது. அங்கு இருக்கும் சூரியம்பாளையம் குடிநீர் திட்டப்பணியை மாநகராட்சி செய்வது என்பது மாநகராட்சிக்கு இழப்பை ஏற்படுத்தும். எனவே அந்த பணிகளை செய்வது ஏற்புடையதல்ல என்றார்.

எனவே தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர் வெளிநடப்பு செய்தனர்.

வாக்குவாதம்

முன்னதாக தூய்மை பணி ஒப்பந்தம், பாதாள சாக்கடை ஒப்பந்தங்கள் குறித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசும்போது, தி.மு.க. கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த ஒப்பந்த முறைகளை கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சிதான் என்றார்.

அதைத்தொடர்ந்து அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர்களிடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.

தி.மு.க. ஆதரவு

பின்னர் தீர்மானம் குறித்து 4-வது மண்டல தலைவர் குறிஞ்சி தண்டபாணி பேசும்போது, அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப தூய்மை பணியை ஒப்பந்ததாரருக்கு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால், இது சரியானதுதானா என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். நம்மிடம் உள்ள 442 நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு அளிக்கும் ஊதியத்தை விட குழு தூய்மை பணியாளர்கள் 1010 பேருக்கு அளிக்கும் ஊதியம் குறைவு. ஆனால், தமிழக அளவில் ஈரோடு மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் பேரில் அதிக பட்ச ஊதியமாக ரூ.707 வழங்கி இருக்கிறோம். இந்த தொகையை வழங்கும்போதே நாம் கொடுக்கிற ஊதியம் குறைவாகத்தான் உள்ளது. இதையே ஒப்பந்ததாரர் மூலம் ரூ.532 மட்டுமே வழங்கப்பட உள்ளது. அப்படி என்றால் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே ஏற்கனவே வழங்கப்படும் ஊதியம் குறைவின்றி வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இப்போது தூய்மை பணியை தனியாரிடம் வழங்கிவிட்டதால் ஏற்கனவே பணியில் இருந்தவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சியை நம்பி இத்தனை ஆண்டுகள் வேலை செய்துவரும் ஒருவருக்கு கூட வேலை இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பேசினார். அவரது கோரிக்கையை ஏற்று தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் ஆதரவு அளித்தனர்.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினார்கள். அதற்கு அதிகாரிகள் பதில் அளித்தனர்.


Next Story