தமிழகத்திலேயே முதல்முறையாக தஞ்சை அருகே ரூ.1 கோடியில் நெல் கொள்முதல் பெருநிலையம்


தமிழகத்திலேயே முதல்முறையாக தஞ்சை அருகே ரூ.1 கோடியில் நெல் கொள்முதல் பெருநிலையம்
x

தமிழகத்திலேயே முதல்முறையாக தஞ்சை அருகே ரூ.1 கோடியில் நெல் கொள்முதல் பெருநிலையம் அமைக்கப்படுகிறது என கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

தஞ்சாவூர்

தமிழகத்திலேயே முதல்முறையாக தஞ்சை அருகே ரூ.1 கோடியில் நெல் கொள்முதல் பெருநிலையம் அமைக்கப்படுகிறது என கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சியில் மேற்கூரை மற்றும் கான்கிரீட் தளத்துடன் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக புதிய சேமிப்பு கிடங்கை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர், நெல் மூட்டைகள் மீது மழை தண்ணீர் விழாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது குறித்து தொழிலாளர்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

செமி குடோன்கள்

தமிழகத்தில் மேற்கூரை, கான்கிரீட் தளத்துடன் கூடிய செமி குடோன்கள் 213 இடங்களில், தலா ரூ.2.86 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் 50 ஆயிரம் டன், சென்னம்பட்டியில் 2,500 டன் மற்றும் பட்டுக்கோட்டை அருகே திட்டக்குடியில் 6 ஆயிரம் டன் என மொத்தமாக 58,500 டன் கொள்ளளவு கொண்ட குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ரூ.1 கோடியில் நெல் கொள்முதல் பெருநிலையம்

இந்திய உணவு கழக நிர்வாக இயக்குனர் மீனா, செமி குடோன் திட்டம் சிறப்பாக உள்ளது எனவும், இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டும் என திட்டத்தின் செயல் வடிவம் குறித்தும் கேட்டறிந்துள்ளார். நெல் சேமிப்புக் கிடங்கை இன்னும் மேம்படுத்துவது தொடர்பாக பணியாளர்களிடம் கலந்தாலோசனை செய்தோம். இதன் மூலம் பக்கவாட்டில் தார்ப்பாய் மட்டும் போட்டால் போதும் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே முதல்முறையாக தஞ்சையை அடுத்த பஞ்சநதிக்கோட்டையில் ரூ.1 கோடி மதிப்பில் பரீட்சார்த்த முறையில் நெல் கொள்முதல் பெருநிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தினமும் 400 டன் நெல் கொள்முதல் செய்யப்படும். நெல் தூற்றுதல், நெல்லை சாக்கில் அள்ளி, கட்டுவது என அனைத்து பணிகளுமே தானியங்கி மூலம் செயல்படுத்தப்படும். இந்த முறை வெற்றி பெற்றால் தொடர்ந்து இந்த திட்டம் அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்லப்படும்.

அறுவடை பணி

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு 2.31 லட்சம் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 35.73 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 35 ஆயிரத்து 941 நியாய விலைக்கடைகள் நடத்தப்படுகின்றன. புதிய நியாய விலைக் கடைகளை உருவாக்குவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூட்டுறவுத்துறை மூலம் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு விவசாய கடனாக ரூ.13 ஆயிரத்து 442 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு ரூ.14 ஆயிரம் கோடி விவசாய கடன் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

கேழ்வரகு

நடப்பு ஆண்டு உலக சிறுதானிய ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே நீலகிரி உள்பட 2 மாவட்டங்களில் கேழ்வரகு சாகுபடி தொடங்கப்படுகிறது. கேழ்வரகை நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாகவும், மற்ற சிறுதானிய பயிர்களை கூட்டுறவு மூலமாகவும் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குனர் பிரபாகர், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் கலெக்டர்(வருவாய்) சுகபுத்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஆலோசகர் ராஜமோகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story