பழனி முருகன் கோவிலில் ரூ.25 லட்சத்தில் குளிர்சாதன எந்திரம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் ரூ.25 லட்சத்தில் குளிர்சாதன எந்திரம் பொருத்தப்பட உள்ளது.
பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில், கோவிலில் திருப்பணிகள், வர்ணம் பூசும் பணிகள், புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. குறிப்பாக ஒரு சில பழைய எந்திரங்கள் மாற்றப்பட்டு வருகிறது. அதோடு பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தற்போது பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். எனவே பக்தர்கள் தரிசனத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் திருப்பணிகள் நடக்கிறது. அந்த வகையில் பழனி உட்பிரகாரத்தில் தரிசனத்துக்கு பக்தர்கள் நிற்கும் மண்டப பகுதியில் ஏற்கனவே குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருந்தது. இதனால் அங்கு வெகு நேரம் காத்திருந்தாலும் சிரமம் இன்றி தரிசனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதிய எந்திரம் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பழைய குளிர்சாதன எந்திரம் கழற்றப்பட்டு புதிதாக ரூ.25 லட்சத்தில் 50 டன் வசதி கொண்ட குளிர்சாதன எந்திரம் பொருத்தப்பட உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் புதிய எந்திரம் பொருத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.