அர்ச்சகர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பஞ்ச சமஸ்காரம்

அர்ச்சகர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பஞ்ச சமஸ்காரம் நடந்தது.
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் யாத்ரி நிவாசில் செயல்பட்டு வரும் பாஞ்சராத்ர ஆகம வைணவ அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பஞ்ச சமஸ்காரம் செய்விக்கும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த பள்ளியில் 23 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் 3 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேருவதற்கு முன்பே பஞ்ச சமஸ்காரம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ள 17 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகளுக்கு மன்னார்குடி ஸ்ரீ சென்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் சுவாமிகள் நேற்று காலை பஞ்ச சமஸ்காரம் எனப்படும் ஐஞ்சீர் சடங்கு நடத்தி சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாணவ, மாணவிகளின் பெயர்களுடன் பெருமாள் பெயரை இணைப்பது உள்ளிட்ட 5 வகையான சடங்குகள் நடத்தி வைக்கப்பட்டது. விழாவில் திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சகரும், ஆன்மிக பயிற்சியாளருமான சுந்தர்பட்டர், பாடசாலை தலைமை ஆசிரியர் கிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.