விழுப்புரத்தில் பயங்கரம்: பிரபல ரவுடி வெட்டிக்கொலை நண்பர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு


விழுப்புரத்தில் பயங்கரம்: பிரபல ரவுடி வெட்டிக்கொலை நண்பர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நண்பரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் மகன் லட்சுமணன் (வயது 38). இவர் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் பாட்டில் கம்பெனி நடத்தி வந்தார்.

பிரபல ரவுடியான இவர் மீது, வேலியம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீததாஸ் உள்பட 2 பேரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் லட்சுமணன், நேற்று காலை 7 மணியளவில் நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

அவர் ஜானகிபுரம் அங்காளம்மன் கோவில் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மிளகாய்பொடி தூவி...

அதன்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். பின்னர், மோப்ப நாய் அங்கு வரவழைக்கப்பட்டது. இந்த நாய், சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஜானகிபுரம் ரெயில்வே கேட் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் மிளகாய் பொடி சிதறிக்கிடந்தது.

கொலையாளிகள், முன்கூட்டியே திட்டமிட்டு லட்சுமணனை வரவழைத்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த லட்சுமணன் மீது அந்த கும்பல், மிளகாய் பொடி தூவியுள்ளனர். இதில் லட்சுமணன் கண் எரிச்சல் ஏற்பட்டு மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததும் அவரை அந்த கும்பல் சுற்றி வளைத்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

நண்பர்களுக்குள் மோதல்

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், லட்சுமணன் மற்றும் அவரது நண்பர்கள் அடிக்கடி ஜானகிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்கொண்டு அருகில் உள்ள காலியிடத்திற்கு சென்று மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். லட்சுமணனின் நண்பர்கள் 4 பேர், ஜானகிபுரம் பகுதியில் இரும்புப்பொருட்கள் திருடுவது உள்ளிட்ட பல திருட்டு சம்பவங்கள் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் கிடைக்கும் பணத்தில் தனக்கும் பங்கு கேட்டு லட்சுமணன் அவர்களை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டி வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி லட்சுமணன், தனது நண்பர்களை அவ்வப்போது மிரட்டி பணம் வாங்கி மது குடித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக லட்சுமணன், தனது நண்பர்களிடம் மது குடிக்க பணம் தரும்படி கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனிடையே லட்சுமணனின் நண்பர் ஒருவர், வேறொருவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். அந்த விவகாரத்தில் லட்சுமணன், தனது நண்பருக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்தும் செய்துள்ளார். இதனால் லட்சுமணன் மீது அவரது நண்பர்களுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து லட்சுமணனை தீர்த்துக்கட்ட அவரது நண்பர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை லட்சுமணனை செல்போன் மூலம் தொடர்புகொண்டு வரவழைத்து அவரை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

மேற்கண்ட தகவல் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒருவர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சரவணன்(38), அய்யப்பன்(40), சக்திவேல்(29), இளையராஜா(24) ஆகிய 4 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சரவணன் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

.......

(பாக்ஸ்) 2 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்

கொலை செய்யப்பட்ட ரவுடி லட்சுமணன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அவர் 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஒரு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் கடலூர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் லட்சுமணனுக்கு, நன்னடத்தை பிணை வழங்கப்பட்டது. இந்த சூழலில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் லட்சுமணன் கொலை செய்யப்பட்டுள்ளார்.


Next Story