பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
சீர்காழி:
சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மருத்துவ முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பரிமளம் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
மருத்துவ முகாமை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவல்லி தொடங்கி வைத்து மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு மூக்கு கண்ணாடி, ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
கண்காட்சி
தொடர்ந்து மருத்துவ முகாமுக்கு வருகை தந்த கர்ப்பிணி பெண்களிடம் அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க பெறுகிறதா என கேட்டறிந்தார். தொடர்ந்து முகாமில் அங்கன்வாடி பணியாளர் சார்பில் வைக்கப்பட்ட ஊட்டச்சத்து பொருட்கள் குறித்த கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
முகாமில் கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய ஆணையர் அருள்மொழி, நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன், பிரபாகரன், சீர்காழி நகர கழக செயலாளர் சுப்பராயன், டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.