பண்ருட்டி நகர சபை கூட்டத்தில் பரபரப்பு

பண்ருட்டி நகர சபை கூட்டத்தில் ஆணையாளருடன் கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி,
பண்ருட்டி நகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சிவா, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் குறித்த விவரம் வருமாறு:- வெங்கடேசன்(அ.தி.மு.க.):- கும்பகோணம் சாலையில் வடிகால் வாய்க்கால் சரிவர தூர்வாரப்படவில்லை. அதனை தூர்வார வியாபாரிகளிடம் வேலை செய்பவர்கள் பணம் கேட்கின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக என் சொந்த செலவில் பொக்லைன் வைத்து தூர்வாரியுள்ளேன். ஆணையாளர் கூறும் பணியை துப்புரவு பணியாளர்கள் கூட செய்வதில்லை. துப்புரவு பணியாளரை டிரைவராக பணியமர்த்தலாம் என்றார். ஆணையாளர்:- எல்லாவற்றுக்கும் ஆணையாளரை பார்த்து கேள்வி கேட்பதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது என்றார். அப்போது கவுன்சிலர் வெங்கடேசன், அனைத்து கோரிக்கைகளையும் ஆணையாளர் மற்றும் சேர்மனிடம் தான் கூறமுடியும் என ஆவேசமாக கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தலைவர் ராஜேந்திரன் மற்றும் பிற கவுன்சிலர்கள் வெங்கடேசனை சமாதானப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கவுன்சிலர்கள் சண்முகவள்ளி, ராமதாஸ், வசந்தாரமேஷ், ஆனந்திசரவணன், சரண்யா, சுவாதி, சீனுவாசன், சோழன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.