ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் எடுத்து செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

திருப்பூர்:
பி.ஏ.பி. திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் எடுத்து செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு கோவை, திருப்பூர் மாவட்ட தலைவர் மதுசூதனன் பேசியதாவது:-
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 4¼ லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. பற்றாக்குறை நீரில் தான் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகிறார்கள். பி.ஏ.பி. திட்டத்தில் இருந்து பொள்ளாச்சி நகராட்சி, உடுமலை நகராட்சி, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி மேற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை, குடிமங்கலம் ஒன்றியம் உள்பட 15 பேரூராட்சிகளுக்கும் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் தமிழகத்துக்கு 20 டி.எம்.சி. தண்ணீரில் 3 டி.எம்.சி. தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது. 17 டி.எம்.சி. தண்ணீரில் தான் பயிர் சாகுபடி செய்யவேண்டியுள்ளது. தென்னை விவசாயம் அதிகம் செய்கிறார்கள். விவசாயம் செய்ய தண்ணீருக்காக பெரும் போராட்டத்தில் இருக்கிறோம். இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்கிற அறிவிப்பு இந்த பகுதி விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது.
ரத்து செய்ய வேண்டும்
ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு ஏற்கனவே அருகில் உள்ள காவிரி, பாலாறு ஆகிய ஆறுகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாலாறு, பரப்பலாறு, குதிரையாறு அணைகளில் இருந்து புதிய திட்டங்களை தீட்டலாம். அதை விட்டு விட்டு 100 கிலோ மீட்டர் தூரத்தில் அதிக செலவு செய்து பி.ஏ.பி. திட்டத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்கு திட்டம் தீட்டியுள்ளது பயன் அற்றது.
பற்றாக்குறை உள்ள பி.ஏ.பி. திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் எடுப்பது வீண் செலவாக அமையும். எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒட்டன்சத்திரத்துக்கு அருகில் உள்ள ஆறுகளில் இருந்து குறைந்த செலவில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதுகுறித்து முதல்-அமைச்சருக்கு பரிந்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மின் இணைப்பு துண்டிப்பு
ஈஸ்வரன் (கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்) :- பல்லடம் தாலுகா வாவிபாளையம், வடமலைபாளையம், கள்ளிபாளையம், காட்டூர் கிராமம் பகுதிகளில் விவசாயிகள் அதிகம் உள்ளனர். பொங்கலூர் ஒன்றியத்தில் பரம்பரையாக விவசாயம் செய்கிறார்கள். இவர்களின் நிலம் மற்றும் கிணறுகள் பி.ஏ.பி. வாய்க்கால் அருகே உள்ளது. 30 வருடத்துக்கு முன்பு மின் இணைப்பு பெற்று பாசனம் செய்து வருகிறார்கள். பல கிணறுகள் பி.ஏ.பி. வாய்க்கால் வெட்டப்படுவதற்கு முன்பே இருந்தவையாகும்.
இந்தநிலையில் கடந்த வாரத்தில் திடீரென பி.ஏ.பி. அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து கிணறுகளுக்கும், வாய்க்கால்களுக்கும் உள்ள தூரத்தை அளந்து 50 மீட்டருக்கு குறைவான தூரம் உள்ள கிணறுகளின் மின் இணைப்பை துண்டிக்கப்போவதாக தகவல் வந்தது. ஏற்கனவே அளவீடு செய்து அதன்பிறகே மின் இணைப்பு வழங்கினார்கள். தற்போது பி.ஏ.பி. எல்லையில் இருந்து தான் அளப்போம் என்று அளந்தால் எங்களில் பலர் பாதிக்கப்படுவார்கள். பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து நேரடியாக தண்ணீரை எடுக்கவில்லை. எனவே கிணறுகளில் உள்ள மின் இணைப்புகளை துண்டிக்கக்கூடாது. அவ்வாறு அளவீடு செய்ய வந்தால் 15 நாட்களுக்கு முன் எந்த ஆவணத்தின் அடிப்படையில் அளவீடு செய்கிறார்கள் என்ற அறிவிப்பு கொடுக்க வேண்டும். அளவீடு செய்த பின் எழுத்து பூர்வமாக அளவை பற்றிய விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
வண்டல் மண் அள்ள அனுமதி
அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு பிரநிதிகள் அளித்த மனுவில், நீர் நிலைகளில் இருந்து விவசாய பயன்பாட்டுக்காக இலவசமாக மண், வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் விதிகளின்படி வண்டல் மண் எடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீர்நிலை இல்லாத கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கும் கடந்த காலங்களில் கிடைத்தது போல் அனைத்து பகுதிகளுக்கும் மண், வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும். மண் வாகனங்களில் ஏற்றிக்கொள்ள விவசாயிகளுக்கு கடந்த காலத்தை போல் அனுமதிக்க வேண்டும். கடந்த காலத்தில் தாசில்தார் மண் அள்ள அனுமதி அளித்ததால் அலைச்சல் இல்லாமல் விவசாயிகள் பயன்பெற்றனர். இந்த முறையும் அப்படியே அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினார்கள்.