மாவட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற 184 அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு வாய்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளிக்கூட மாணவர்கள் 184 பேருக்கு மருத்துவ படிப்புக்கு வாய்ப்பு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளிக்கூட மாணவர்கள் 184 பேருக்கு மருத்துவ படிப்புக்கு வாய்ப்பு உள்ளது.
நீட் தேர்வு
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் இந்த தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண் பெற்றால் அதன் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த நீட் தகுதி தேர்வுக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் அனுமதியுடன் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
அதே நேரம் நீட் தேர்வில் தமிழக மாணவ-மாணவிகள் சிறப்பாக செயல்பட பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. குறிப்பாக அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற பயிற்சிகளும், அவர்களுக்கு தனியாக 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டினையும் தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
சிறப்பு பயிற்சி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் மாவட்டம் தோறும் நீட் தகுதித்தேர்வு, பொறியியல் படிப்புகளுக்கான தகுதித்தேர்வு மற்றும் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் மாணவ-மாணவிகளை தயார் செய்யும் வகையில் மாதிரி பள்ளிக்கூடங்களும் இயக்கப்படுகின்றன. ஈரோடு மாவட்ட அளவில் மாவட்டம் முழுவதும் இருந்து 75 மாணவ-மாணவிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு உண்டு உறைவிட பள்ளியாக சிறப்பு மாதிரி பள்ளி இயக்கப்பட்டு வருகிறது.
இதில் 52 மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று இருப்பதுடன், நேரடியாகவும் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் மூலமாகவும் மருத்துவப்படிப்புக்கு இடம் பெறும் வாய்ப்பு பெற்று உள்ளனர். அவர்களுக்கு ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குழந்தை ராஜன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து இருப்பதுடன், அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
184 பேர்
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ்-2 முடித்த உடன் நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளிக்கூட மாணவர்கள் 27 பேரும், மாணவிகள் 78 பேரும் என 105 பேர் வெற்றி பெற்று 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்புக்கு செல்லும் வாய்ப்பு பெற்று உள்ளனர்.
கடந்த முறை முயற்சி செய்து, இடம் கிடைக்காமல் மீண்டும் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள் 14 பேரும், மாணவிகள் 65 பேரும் என 79 பேரும் இந்த பட்டியலில் உள்ளனர். மொத்தம் ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு 41 மாணவர்கள், 143 மாணவிகள் என 184 பேர் மருத்துவப்படிப்பில் சேரும் வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் இருந்து 22 பேர் எம்.பி.பி.எஸ், 3 பேர் பி.டி.எஸ். என மொத்தம் 25 பேர் மட்டுமே மருத்துவப்படிப்புக்கான வாய்ப்புபெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு மற்றும் கல்வித்துறையின் முயற்சியால் அந்த எண்ணிக்கை இந்த ஆண்டு பல மடங்கு உயர்த்து உள்ளது.