ராமநாதபுரத்தில் போலி முகவரியில் பாஸ்போர்ட்கள்:மதுரையை சேர்ந்தவரும் கைது

ராமநாதபுரத்தில் ேபாலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற விவகாரத்தில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவரும் சிக்கி உள்ளார். இதுகுறித்து பரபரப்பு தகவல்கள் தெரியவந்நதன.
ராமநாதபுரத்தில் ேபாலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற விவகாரத்தில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவரும் சிக்கி உள்ளார். இதுகுறித்து பரபரப்பு தகவல்கள் தெரியவந்நதன.
போலி முகவரியில் பாஸ்போர்ட்
ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை கொழும்பு மரதானா பகுதியை சேர்ந்த துவான் சபைதீன் (வயது 45), சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதல் நாட்கள் தங்கியதால் அவரின் பாஸ்போர்ட் புதுப்பிக்க முடியாமல் போனதாகவும், இதனால் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் பெற பனைக்குளம் மேற்குத்தெருவை சேர்ந்த அன்வர்ராஜா (45) என்பவரை அணுகி உள்ளார். அவர் தனது வீட்டின் பின்பகுதியில் துவான் சபைதீன் வசித்து வருவதாக கூறி தூத்துக்குடி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து, அவருக்கு பாஸ்போர்ட் வாங்கி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் பனைக்குளத்தை சேர்ந்த பாஸ்போர்ட் ஏஜென்டு அன்வர்ராஜாவையும் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.
அன்வர்ராஜா மூலம் ராமநாதபுரம் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்திருக்கிறது.
எனவே ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க திருப்புல்லாணி ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
ெபரும்பாலும் ராமநாதபுரம் மாவட்ட முகவரியை கொடுத்தே பலர் பாஸ்போர்ட் பெற்றுள்ளார்கள் என்பதும் தெரியவந்தது.
அன்வர்ராஜா மட்டுமல்லாது வேறு சில ஏஜென்டுகளும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், மதுரை மேலூர் தாலுகா உறங்கான்பட்டி அருகே கொட்டாணிபட்டியை சேர்ந்த கணேசன் (45) என்பவரும், போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து இருந்த தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் பாஸ்போர்ட்டை பெறவந்த கணேசனை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:-
ரூ.1 லட்சம்
மேற்கண்ட கணேசன் 4-ம் வகுப்பு வரை படித்துவிட்டு மேலூர் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலைபார்த்துள்ளார். வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் பெறமுடியாத நிலை குறித்து தெரிவித்ததன் அடிப்படையில் அவர் கடந்த 2003-ம் ஆண்டு நாகபட்டினம் முகவரியில் கருப்பையா மகன் போஸ் (45) என்ற பெயரில் பாஸ்போர்ட் பெற்றுள்ளார். அதனை வைத்து கணேசன் துபாய் சென்று அங்கு பணியாற்றிய நிலையில் பாஸ்போர்ட்டை மீண்டும் புதுப்பிக்க முடியாததால் அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட 2 ஆண்டுகள் கூடுதலாக தங்கியிருந்து போலீசாரிடம் சிக்கி திரும்பி வந்தார். இந்தநிலையில் மீண்டும் வெளிநாடு செல்ல விரும்பி, பனைக்குளம் அன்வர்ராஜாவிடம் ரூ.1 லட்சம் ெகாடுத்து பாஸ்போர்ட் தயார் செய்ய சொல்லி இருக்கிறார். இலங்கைகாரருக்கு பயன்படுத்தியதை போன்று தனது வீட்டு முகவரியை கொடுத்து போஸ் என்ற பெயரிலேயே ஆவணங்கள் தயாரித்து, அதன் அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். அந்த பாஸ்போர்ட்டை பெற வந்தபோதுதான் கணேசன் போலீசாரிடம் சிக்கினார். இதனை தொடர்ந்து போலீசார் கணேசனை ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் பலர்
இதுபோன்று போலி ஆவணம், போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற பலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும், எனவே விரைவில் மேலும் பலர் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.