சாலையில் சுற்றித்திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம்

சீர்காழியில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
சீர்காழி:
சீர்காழியில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
போக்குவரத்து இடையூறு
சீர்காழி நகர் பகுதியில் தென்பாதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஈசானிய தெரு, ரெயில்வே ரோடு, தேர் மேல வீதி, மயிலாடுதுறை சாலை, சிதம்பரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கால்நடைகள் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சாலையில் சுற்றித்திரிகின்றன.
இதனால் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், நகர மன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து நகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அபராதம்
இதையடுத்து நகராட்சி ஆணையர் வாசுதேவன் கூறுகையில், சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றிதிரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இதே போல் இரண்டாவது முறையாக கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரிய விட்டால் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் தொடர்ந்து கால்நடைகளை சாலையில் சுற்றித்திரிய விட்டால் கால்நடைகளை பிடித்து அருகில் உள்ள கோசலைகளில் ஒப்படைக்கப்படும் என்றார்.